Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதற்கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது; ஜார்க்கண்டில் 43 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு: 683 வேட்பாளர்கள் போட்டி

ராஞ்சி: ஜார்கண்டில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 43 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது. இந்த தொகுதிகளில் 683 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்த உள்ள 81 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு நாளையும் (நவ. 13), 38 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் வரும் 20ம் தேதியும் நடைபெறவுள்ளன. நவ.23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

இதற்கான பிரசாரத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சி -காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. முதற்கட்டமாக தேர்தல் 43 சட்டப்பேரவை தொகுதிக்கான பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. 43 தொகுதியில் இருந்தும் வெளியூர் நபர்கள் வெளியேற்றப்பட்டனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 53 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 176.15 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்ட தேர்தல் 43 தொகுதிகளில் மொத்தம் 683 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 15,344 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் நகர்ப்புற வாக்குச்சாவடிகள் 2,628 ஆகவும், ஊரக வாக்குச் சாவடிகள் 12,716 ஆகவும் உள்ளன. மொத்த வாக்காளர்களில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 1,91,553 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

34 சட்டப்பேரவை, வயநாடு மக்களவை தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது

48 சட்டப்பேரவை தொகுதிகள், கேரளாவில் வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், மகாராஷ்டிராவில் ஒரு மக்களவை தொகுதி, உத்தரகாண்டில் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு நவம்பர் 20ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதில் உபியில் 9, பஞ்சாப் மாநிலத்தில் 4, கேரளாவில் ஒரு தொகுதி உள்பட 14 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி நவ.13ல் இருந்து நவ.20ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. மீதம் உள்ள 34 சட்டப்பேரவை தொகுதிகள், வயநாடு மக்களவை தொகுதிக்கான தேர்தல் பிரசாரம் நேற்று ஓய்ந்தது. அங்கும் நாளை இடைத்தேர்தல் நடைபெறும். வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.