கோவை: லோன் ஆப் நிர்வாகம் வெளியிட்ட ஆபாச வீடியோவை நீக்கித்தருவதாக ஆசிரியையிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஈச்சனாரி பகுதியை சேர்ந்தவர் அனிதா (33). (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர், காரமடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார். இவர், ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் வெவ்வேறு லோன் ஆப் மூலம் ரூ.12 லட்சம் கடன் வாங்கினார். ஆனால், இந்த கடனை அவர் நீண்ட நாட்களாக கட்டவில்லை.
அவர், கடன் வாங்கியபோது அடையாளமாக அவரது ஆதார் கார்டு மற்றும் தனது பெயரை கூறுவது போல் வீடியோவை லோன் ஆப் நிர்வாகத்தினருக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பினார். அந்த வீடியோவை அவர்கள் மார்பிங் செய்து வேறொரு பெண்ணுடன் இணைத்து ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டி பணம் கேட்டனர். அப்போதும் அவர் கொடுக்காததால் இண்டர்நெட்டில் அனிதாவின் மார்பிங் ஆபாச வீடியோவை கசிய விட்டனர். இதனால், அனிதா கடும் மன குழப்பத்தில் இருந்தார். இதற்கிடையே, உடுமலையை சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான அரவிந்த் (31) என்பவர், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து ஒவ்வொரு கல்லூரிக்கும் நேரில் சென்று விழிப்புணர்வு வகுப்பு நடத்தி வருகிறார்.
இதேபோல் அரவிந்த், அனிதா வேலை பார்த்த கல்லூரிக்கும் சென்று விழிப்புணர்வு செய்தார். அப்போது, அனிதா தனியாக அரவிந்தை சந்தித்து தன்னை லோன் ஆப் நிர்வாகத்தினர் மிரட்டுவதாகவும், ஆபாச வீடியோவை எப்படியாவது நெட்டில் இருந்து அகற்றி தன்னை இந்த பிரச்சனையில் இருந்த காப்பாற்றும் படியும் கேட்டு கொண்டார்.
இதற்கு உதவுவதாக கூறிய அரவிந்த், லோன் ஆப் நிர்வாகத்தினரை சரி கட்டி அந்த வீடியோவை நீக்கி தருகிறேன் என கூறி அனிதாவிடம் சிறிது, சிறிதாக ரூ.13 லட்சத்தை வெவ்வேறு கட்டங்களாக பெற்றுள்ளார். ஆனால், அந்த மார்பிங் வீடியோ நீக்கப்படவில்லை. இது குறித்து அனிதா, அரவிந்திடம் கேட்டபோது மழுப்பலான பதிலை கூறி சமாளித்துள்ளார். பணத்தை திருப்பி கேட்டபோது அதனை கொடுக்கவில்லை. இதுகுறித்து அனிதா கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.13 லட்சம் மோசடி செய்ததாக அரவிந்தை கைது செய்தனர். மேலும் மார்பிங் வீடியோவை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


