சென்னை: பாலிஹோஸ் நிறுவனம் தொடர்புடைய சென்னை கிண்டி, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருங்காட்டுக்கோட்டையில் உள்ள பாலிஹோஸ் தொழிற்சாலையில் 7 வாகனங்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பாலிஹோஸ் நிறுவனம் ரூ.200 கோடி முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் கடந்த வாரம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் பாலிஹோஸ் இந்தியா ரப்பர் பிரைவேட் லிமிடெட், இடால் பிளாஸ்டிக் நிறுவனம் மற்றும் எம்.ஆர்.எம். கட்டுமான நிறுவனத்திக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருவமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அபிராமபுரம் ஏ.பி.எம். அவென்யூ கிரசன்ட் தெருவில் உள்ள தொழிலதிபர் சபீர் யூசப் என்பவர் வசித்து வருகிறார். இவர், பாலிஹோஸ் ரப்பர் பைப் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் ரப்பர் மற்றும் பைப் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்சாலையில் உள்ள இடால் பிளாஸ்டிக் காம்பவுண்டஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன தொழிற்சாலை, சென்னை அடுத்த வேலப்பன்சாவடியில் எம்.ஆர்.எம். என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சுஜித் முகர்ஜி என்பவர் உரிமையாளராக உள்ளார். இந்த நிறுவனங்கள் கடந்த 2023-24ம் ஆண்டில் தங்களது வருமானத்தை குறைத்து வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது.
அதில் குறிப்பாக பாலிஹோஸ் இந்தியா ரப்பர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், விமானம் மற்றும் ராட்சத இயந்திரங்களுக்கு தேவையான ரப்பர் போன்ற உதிரிபாகங்கள் தயாரித்து பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதில் முரண்பட்ட கணக்குகளை வருமான வரித்துறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து எம்.ஆர்.எம். கட்டுமான நிறுவனம் மற்றும் பாலிஹோஸ் ரப்பர் தயாரிப்பு நிறுவனம், இடால் பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சொந்தமான சென்னை, அம்பத்தூர் கஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக பாலிஹோஸ் நிறுவனங்களின் உரிமையாளரின் அபிராமபுரத்தில் உள்ள வீடு, தொழிற்சாலைகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், எம்.ஆர்.எம்.கட்டுமான நிறுவனம், மற்றும் அதன் உரிமையாளர் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது.
இந்த சோதனையில் கடந்த 2 ஆண்டுகளாக வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களை கைப்பற்றி மொத்த வருவாய் மற்றும் லாபம் தொடர்பான கணக்கு வழக்கைகள் தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்கு விபரங்கள் குறித்து அதிகாரிகள் பறிமுதல் செய்து ஒப்பிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
