உடற்கல்வி ஆசிரியர் தேர்வில் மெகா மோசடி; போலி பட்டங்கள் மூலம் அரசுப் பணியில் சேர்ந்த 202 பேர் மீது வழக்கு: உத்தரபிரதேசத்தில் நடந்த கூத்து
இந்தத் தேர்வின் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட 203 பேரில், 202 பேர் ஷிகோஹாபாத்தில் உள்ள ஜே.எஸ் பல்கலைக்கழகத்தின் பெயரில் வழங்கப்பட்ட போலியான மதிப்பெண் சான்றிதழ்களைப் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜே.எஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு கல்வி ஆண்டில் 100 மாணவர்களுக்கு மட்டுமே பி.எட் படிப்புக்கு அங்கீகாரம் உள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தின் பட்டத்தைக் குறிப்பிட்டு சுமார் 2,082 பேர் அரசு வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 25 பேர் வேறு நிறுவனங்களில் படித்ததாகக் கூறி, ஜே.எஸ் பல்கலைக்கழகத்தின் மதிப்பெண் சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளனர். 26 பேர் தங்களது கல்வி ஆண்டுகளுடன் தொடர்பில்லாத பட்டங்களை அளித்துள்ளனர்.
9 பேர் முற்றிலும் போலியான சான்றிதழ்களைக் கொடுத்துள்ளனர். மேலும் 43 பேர், 2022 செப்டம்பர் 25 அன்று தேர்வு நடந்த நிலையில், 2020-2022ம் கல்வி ஆண்டுக்கான பட்டங்களைச் சமர்ப்பித்துள்ளனர். சரிபார்க்கப்பட்ட 203 பட்டங்களில், குல்ராஜ் சிங் என்பவரின் பட்டம் மட்டுமே உண்மையானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போலி மதிப்பெண் சான்றிதழ்களைத் தயாரித்து விநியோகிப்பதில் இடைத்தரகர்களுக்குத் தொடர்பு இருப்பதையும் சிறப்பு அதிரடிப்படை கண்டறிந்துள்ளது. ஜே.எஸ் பல்கலைக்கழகத்தின் சர்வர் காப்புப் பிரதியிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகள் மூலம் இந்த மோசடி உறுதி செய்யப்பட்டது. தற்போது, ஜே.எஸ் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட 165 விண்ணப்பதாரர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 37 பேர் மீது, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது மற்றும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியது போன்ற குற்றங்களுக்காக ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.