Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டுது மழை; பெரியாறு அணை நீர்மட்டம் 4 நாள்களில் 4 அடி உயர்வு: 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 4 நாள்களில் 4 அடி உயர்ந்துள்ளது. இதனால், 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகின்றன. இந்தாண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்னதாக தொடங்கிய நிலையில், முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் மழை வெளுத்துக் கட்டி வருகிறது. குறிப்பாக பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் தேக்கடி பகுதிகளில் கடந்த 4 நாட்களில் 50 செ.மீ வரை மழை கொட்டித் தீர்த்துள்ளது. கடந்த மே 23ம் தேதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114 அடியாகவும், நீர்வரத்து 100 கனஅடியாகவும், நீர்இருப்பு 1634.875 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக கடந்த 2 நாட்களாக அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,205.10 கனஅடியாக உயர்ந்துள்ளது. 4 நாட்களுக்கு முன் 114 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 118.40 அடியாக உள்ளது. தற்போது அணையின் நீர்இருப்பு 2,285.10 மில்லியன் கனஅடி. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்தும், நீர்மட்டமும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே, 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 52.99 அடி. நீர்வரத்து வினாடிக்கு 426 கனஅடி. நீர்திறப்பு 72 கனஅடி. நீர்இருப்பு 2,409 மில்லியன் கனஅடி.

57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.60 அடி. அணைக்கு நீர்வரத்து 15 கனஅடி. நீர் வெளியேற்றம் இல்லை. நீர் இருப்பு 180.13 மில்லியன் கன அடி. 126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 93.97 அடி. நீர்வரத்து 3 கனஅடி. நீர் திறப்பு 3 கனஅடி. நீர்இருப்பு 56.63 மில்லியன் கன அடி. 52.55 அடி உயரமுள்ள சண்முகநதி அணையின் நீர்மட்டம் 43.50 அடி. நீர்வரத்து 9 கனஅடி. நீர் வெளியேற்றம் இல்லை. நீர் இருப்பு 52.77 மில்லியன் கனஅடி.

மூலவைகையில் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியம், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளிமலை வனப்பகுதியில் மூலவைகை ஆறு உருவாகிறது. மேலும் மலையில் இருந்து சிற்றோடையாக வரும் தண்ணீர் மற்றும் அரசரடி, பொம்மராஜபுரம், நொச்சி ஓடை, ஐந்தரைப் புலி, காந்தி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர் ஆகியவை ஒன்று சேர்ந்து மூலவைகை ஆறாக கண்டமனூர், குன்னூர் வழியாக ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையை சென்றடைகிறது. இந்த நிலையில் நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தற்போது மூலவைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.