Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நடைபாதைகளில் தீவிர தூய்மை பணி: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னையில் பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பேருந்து சாலைகளின் நடைபாதைகளில் உள்ள கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, நாள்தோறும் சராசரியாக 5,900 மெட்ரிக் டன் திடக்கழிவு அகற்றப்பட்டு வருகிறது. மேலும், தீவிர தூய்மை பணியின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் குப்பை, கட்டிட கழிவுகள், சாலையோரங்கள் மற்றும் சாலை மையத்தடுப்புகளில் உள்ள மண் மற்றும் குப்பையை அகற்றுதல், நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதேபோல், பூங்காக்களில் தூய்மை பணிகள், விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுதல், பெருமளவு குப்பை சேகரமாகும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் உள்ள குப்பையை சுத்தம் செய்து, அவ்விடங்களில் சுகாதார பணிகள் மேற்கொள்ளுதல், சேதமடைந்த குப்பை தொட்டிகளுக்கு மாற்றாக புதிய குப்பை தொட்டிகள் வைத்தல் உள்ளிட்ட தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் மக்களின் சுகாதாரத்தை பேணுகின்ற வகையிலும், தூய்மையான நகரமாக விளங்குகின்ற வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் அமைக்கப்பட்ட அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி முதற்கட்டமாக தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குப்பை, கட்டிடக் கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பதாகைகள் அகற்றுதல், பயணியர் இருக்கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, 2ம் கட்டமாக 15 மண்டலங்களிலும் உள்ள 1,363 பேருந்து நிறுத்தங்களிலும், கடந்த மாத இறுதியில் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளில் குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றுதல், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றுதல், இருக்கைகள் மற்றும் பேருந்து நிறுத்தத்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தை சுத்தம் செய்து, பேருந்து நிழற்குடைகள் முழுவதையும் தண்ணீர் பயன்படுத்தி சுத்தம் செய்தல், நிழற்குடைகளில் உள்ள பழுதுகளை அடையாளம் கண்டு, அவற்றின் அளவீடுகளை கணக்கெடுத்து மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சென்னையின் முக்கிய சாலைகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள நடைபாதைகளை சீரமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் உள்ள பெரும்பாலான நடைபாதைகளில் கேட்பாரற்ற வாகனங்கள், தள்ளுவண்டி கடைகள், ஆட்டோ ஸ்டாண்டு, தனியார் வாகனங்கள் நிறுத்துவது, ஆக்கிரமிப்பு கடைகள், குப்பை குவியலாக காட்சியளிப்பது என முறையான பராமரிப்பின்றி காணப்படுவதால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், பொதுமக்கள் அவ்வப்போது விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, முக்கிய சாலைகளில் ஏற்படும் நெரிசலை குறைக்கவும், பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் நடைபாதைகளில் 15 நாட்களுக்கும் மேலாக கைவிடப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், என மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, 15 நாட்களாக ஒரு வாகனம் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டு இருந்தால், அந்த வாகனம் தொடர்பாக உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு, உரிமை கோரப்படாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும்.

கடந்த வருடம் ஜூலை முதல், சென்னை மாநகராட்சி 1,774 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது. 729 வாகனங்கள் மீட்கப்பட்டது. மீதமுள்ள 1,045 வாகனங்கள் ஏலத்திற்கு தயாராகி உள்ளது. இந்நிலையில், சென்னையின் பேருந்து சாலைகள் முழுவதும் உள்ள நடைபாதைகளை பாதசாரிகள் பயன்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்றவகையில் நேற்று முன்தினம் முதல் வரும் 27ம்தேதி வரை இரவு நேரங்களில் தீவிரத் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியின் போது, நடைபாதைகளில் உள்ள குப்பை, கட்டிட கழிவுகள், நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட வாகனங்கள், தேவையற்ற இன்டர்நெட் மற்றும் மின் வயர்களை அகற்றுதல், பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ள பிற பொருட்களை அகற்றுதல், சாலையோர மின்விளக்குகளை மறைக்கும் வகையில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், நடைபாதைகள் சுத்தம் செய்தல் உள்ளிட்ட தூய்மைப் பணி நடவடிக்கைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், இப்பணியில் நடைபாதைகளில் உள்ள சிறுசிறு பழுதுகள் கணக்கீடு செய்யப்பட்டு, மதிப்பீடுகள் தயாரித்து அவற்றை சரிசெய்யும் நடவடிக்கைகளும், சாலையின் சம உயர அளவில் அமைந்துள்ள நடைபாதைகள் கணக்கிடப்பட்டு, பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக அந்த இடங்களில் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் கைப்பிடிகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.