விழுப்புரம்: கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் யார் யாத்திரை சென்றாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், செயல் தலைவர் அன்புமணிக்கு இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இருவரும் நிர்வாகிகளை நீக்குவதும், நியமிப்பதுமாக செயல்பட்டு வருகின்றனர். பொதுக்குழுவை கூட்டி கட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் இருவரும் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்காக ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாவட்ட பொதுக்குழுவை கூட்டி நிர்வாகிகளின் ஆதரவை திரட்டி வருகின்றனர். இதற்கிடையே அன்புமணி தன்னுடைய பெயரை பயன்படுத்த கூடாது என ராமதாஸ் தடாலடியாக அறிவித்திருந்தார்.
ஆனால், அன்புமணி தொடர்ந்து தனது பெயருடன் ராமதாஸ் பெயரை பயன்படுத்தி வருகிறார். இதனிடையே தமிழக மக்கள் உரிமை மீட்பு எனும் நடை பயணத்தை அன்புமணி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; பாமகவுக்கு நான் மட்டும் தான் தலைவர். பாமகவில் ஒரே தலைமை தான். பாமகவின் வேரும் வியர்வையும் தைலாபுரத்தில் தான் உள்ளது. யார் என்ன நடைபயணம் போனாலும் எந்தப் பயனும் இல்லை. அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தேவையில்லாதது. கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் யார் யாத்திரை சென்றாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள். பாமக தலைவர் என்ற பெயரோடு யார் எதை சொன்னாலும் அதை கேட்க வேண்டாம் என்று கூறினார்.