புதுடெல்லி: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ராஜஸ்தான் அரசு ஊழியர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தை சோந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது. அப்போது பாகிஸ்தானுக்காக இந்தியாவில் இருந்து கொண்டு உளவு பார்த்த பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் நேற்று மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் மாநிலத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது படைகளின் நிலை மற்றும் இயக்கம் குறித்த முக்கியமான தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக பஞ்சாபின் டர்ன் தரன் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் டர்ன் தரனில் உள்ள மொஹல்லா ரோடுபூரில் வசிக்கும் ககன்தீப் சிங் என்ற ககன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பஞ்சாப் காவல்துறை இயக்குநர் ஜெனரல் கவுரவ் யாதவ் தெரிவித்தார். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட காலிஸ்தான் ஆதரவு தலைவர் கோபால் சிங் சாவ்லாவுடனும் அவர் 5 ஆண்டுகளாக தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு உளவு தெரிவித்த தகவல் அடங்கிய மொபைல் போனுடன் அவர் சிக்கினார். பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனமான ஐஎஸ்ஐ உடன் தொடர்பில் இருந்ததாகவும், முக்கியமான தகவல்களை அனுப்புவதற்காக பணம் பெற்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் இதுவரை பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் அரசு ஊழியர்: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய ஷகூர் கான், பாகிஸ்தானுக்கு முக்கிய தகவல்களை அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது நடவடிக்கை குறித்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை நீண்ட காலமாக கண்காணித்து வந்தனர். அப்போது டெல்லியில் உள்ள பாக். உயர் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி அஹ்சன்-உர்-ரஹீம் என்கிற டேனிஷ் மற்றும் சோஹைல் கமர் ஆகியோருடன் ஷகூர் கான் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் பாகிஸ்தான் விசாக்களைப் பெற்றதாகவும், டேனிஷ் உதவியுடன் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ததும், அங்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் முன்னர் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஷேல் முகமதுவின் தனிப்பட்ட உதவியாளராக பணியாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது ராஜஸ்தான் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
* பாக்.கிற்கு ஆதரவு அசாமில் மேலும் ஒருவர் சிக்கினார்
சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததாக அசாம் மாநிலம் லக்கிம்பூரை சேர்ந்த அஜிபுல் இஸ்லாம் என்பவரை போலீசார் கைது செய்தனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாக்.கிற்கு ஆதரவு தெரிவித்து இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.


