Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் சாதனை; தோல்வி தொடர்ந்தால் மசூத் கேப்டனாக நீடிப்பது சிரமம்: ரமீஸ்ராஜா காட்டம்

ராவல்பிண்டி:வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த நிலையில், பின்னர் களமிறங்கிய வங்கதேசம் 565 ரன்களை குவித்தது.

இதனால் 117 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 146 ரன்களுக்குள் சுருண்டது. இதனையடுத்து 30 ரன்கள் என்ற இலக்கை வங்கதேசம் எளிதாக எட்டி முதல் முறையாக பாகிஸ்தான் அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 9 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் அந்த அணி குறித்து கிரிக்கெட் பிரபலங்கள் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இது குறித்து கிரிக்கெட் வர்ணனையாளரும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரருமான ரமீஸ் ராஜா தனது யூடியூப் சேனலில் பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூட்டை கடுமையாக சாடி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ராவல்பிண்டி போன்ற மைதானத்தில் ஒரு ஸ்பின்னர் கூட இல்லாமல் பாகிஸ்தான் அணி களமிறங்கியது ஆச்சரியமாக உள்ளது. கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். அப்போதே உலகத் தரத்திலான வேகப்பந்துவீச்சு என்ற பெருமையை பாகிஸ்தான் அணி இழந்துவிட்டது. வங்கதேச அணியின் ஸ்பின்னர்கள் 16 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.

இந்த சூழலில் எப்படி 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் முடிவை கேப்டன் மசூத் எடுத்தார் என்று தெரியவில்லை. மேலும் மசூத்தின் பேட்டிங்கும் மோசமாக உள்ளது. இது தொடரும் பட்சத்தில் அணியில் அவர் நீடிப்பதே சிரமம் தான். சொந்த மண்ணில் வங்கதேசம் போன்ற அணிகளுடனான தோல்வி பாகிஸ்தான் அணிக்கு நல்லதல்ல. ஏற்கனவே நமது கிரிக்கெட் வாரியம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. அடுத்த போட்டி 30ம் தேதி தொடங்குகிறது. சொந்த மண்ணில் தொடரை இழந்தால் பாகிஸ்தான் அணி மேலும் மோசமான விமர்சனங்களை சந்திக்க நேரிடும். எனவே அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டியது அவசியம்’’ என்றார்.

மிகப்பெரிய படிப்பினை;

தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் கூறுகையில், ``நிச்சயமாக தோல்விக்கு சாக்கு சொல்லமாட்டேன். இந்த பிட்ச் எதிர்பார்த்ததை போல் அமையவில்லை. கடந்த 9 நாட்களாக இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் மழை பெய்து வந்தது. அதனால் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அது தவறாகிவிட்டது. 450 ரன்களை எடுத்த பின் டிக்ளேர் செய்ததற்கான காரணம், வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தான். அதேபோல் பவுலிங்கிலும் வங்கதேச அணியை கட்டுப்படுத்த தவறிவிட்டோம். சில தவறான கணிப்புகள் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த போட்டியில் செய்த தவறுகளை வரும் நாட்களில் சரி செய்வோம். எந்த பிட்சாக இருந்தாலும் ஸ்பின்னருக்கான இடம் அணியில் உள்ளது. ஆமிர் ஜமாலால் பேட்டிங், பவுலிங்கில் பங்களித்திருக்க முடியும். அவரை மிஸ் செய்துவிட்டோம். அதேபோல் சிட்னி டெஸ்ட் போட்டியில் சாஜித் கான் சிறப்பாக ஆடினார். அங்கும் 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் விளையாடியது பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த போட்டி எங்களுக்கு மிகப்பெரிய படிப்பினையாக உள்ளது. இனி மீண்டும் தவறுகளை செய்யாமல் இருந்தாலே வெல்ல முடியும்’’ என்றார்.