Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாக். உடனான போர் வழக்கமானதாக இருந்தது அணு ஆயுத அறிகுறிகள் எதுவும் இல்லை: நாடாளுமன்ற குழுவிடம் வெளியுறவு செயலர் விளக்கம்

புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும், பாகிஸ்தானில் கடந்த 7ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல், போர் நிறுத்தம், வெளியுறவு கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து காங்கிரசின் சசிதரூர் தலைமையிலான வெளியுறவு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று விளக்கம் அளித்தார்.

இக்குழுவில் திரிணாமுல் காங்கிரசின் அபிஷேக் பானர்ஜி, காங்கிரசின் ராஜீவ் சுக்லா மற்றும் தீபேந்தர் ஹூடா, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, பாஜவின் அபராஜிதா சாரங்கி மற்றும் அருண் கோவில் உள்ளிட்ட எம்பிக்கள் பங்கேற்றனர். எம்பிக்களின் கேள்விகளுக்கு விக்ரம் மிஸ்ரி பதிலளித்து கூறியதாவது: பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், உடனடியாக பாகிஸ்தானில் உள்ள தங்களை ஏவியவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர். ஐநாவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட பலரும் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலா வருகின்றனர். தீவிரவாதிகளுக்கும், பாகிஸ்தான் உளவுத்துறைக்கும், அந்நாட்டு அரசு நிர்வாகத்திற்கும் இடையே வெளிப்படையான தொடர்பு இருக்கிறது. பாகிஸ்தானின் போர் முறைகள் வழக்கமானதாகவே இருந்தது. அதில் அணு ஆயுத பயன்படுத்துவதற்கான அறிகுறிகள் எதுவும் இருக்கவில்லை.

மோதலில் பாகிஸ்தான் சீன தயாரிப்பு வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தினாலும், அவர்களின் விமானத் தளங்களை இந்திய படைகள் தகர்த்துள்ளன. எனவே அது ஒரு பொருட்டல்ல. போரில் இந்தியாவின் விமானங்களை சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது குறித்து வெளிப்படையாக பதிலளிக்க முடியாது. இது தேசிய பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விஷயம். துருக்கி, பாகிஸ்தான், அஜர்பைஜான் ஆகிய 3 நாடுகளும் 3 சகோதரர்களாக இருப்பதை அனைவரும் அறிவார்கள். இவர்கள் எப்போதுமே இந்தியாவை ஆதரிப்பவர்களாக இருந்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார். போர் நிறுத்தத்தை தொடர்ந்து, மிஸ்ரி மற்றும் அவரது மகள் சமூக வலைதளங்களில் டிரோல் செய்யப்பட்டதை குழு உறுப்பினர்கள் ஒருமனதாக கண்டிப்பதாகவும், அவரது செயல்பாடு சிறப்பாக இருந்ததாகவும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

* டிரம்ப் போரை நிறுத்தவில்லை

போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய காரணமாக இருந்தது குறித்த எம்பிக்களின் கேள்விக்கு பதிலளித்த மிஸ்ரி, ‘‘போர் நிறுத்தம் இரு தரப்பில் எடுக்கப்பட்ட முடிவு. பாகிஸ்தான் தரப்பில் இருந்து போர் நிறுத்தத்திற்கான கோரிக்கை முதலில் எழுப்பப்பட்டது. அதன் பின் இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதில் எந்த 3ம் தரப்பும் முக்கிய பங்கு வகிக்கவில்லை’’ என்றார்.