Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சோழவந்தான் பகுதியில் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: குடோனுக்கு எடுத்து செல்ல கோரிக்கை

சோழவந்தான்: சோழவந்தான் பகுதியில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை குடோனுக்கு எடுத்து சென்று பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் கால்வாய் மற்றும் கிணற்று பாசனம் மூலம் நெல் பயிரிடப்பட்டு அறுவடை பணிகள் முடிந்தன. அறுவடை செய்த நெல்மணிகளை விவசாயிகளிடம் பெறுவதற்காக ரிஷபம், முள்ளிப்பள்ளம், தென்கரை நாராயணபுரம், இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம், அம்மச்சியாபுரம், பொம்மன்பட்டி, கரட்டுப்பட்டி, நாச்சிகுளம் உள்ளிட்ட கிராமங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது. இந்த கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு 40 கிலோ மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த மூட்டைகள் வாடிப்பட்டி மற்றும் கப்பலூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு (குடோன்) அனுப்பப்படும். இவற்றில் இடம் இல்லாத பட்சத்தில் கூடல் நகர், திருவாதவூர், சிந்தாமணி பகுதியிலுள்ள குடோன்களுக்கு கொண்டு செல்லப்படும். இந்த குடோன்களில் இருந்து அரவை மில்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால், தற்போது குடோன்களில் இடமில்லை என காரணம் கூறி நெல் மூட்டைகளை எடுத்து செல்லாததால் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கிக் கிடக்கின்றன. ஒவ்வொரு இடங்களிலும் சுமார் 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் மூட்டைகள் வரை தேங்கிக் கிடக்கின்றன. மழை மற்றும் வெயில் பாதிப்பிலிருந்து காக்க தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கடின உழைப்பால் விளைந்த நெல் மணிகள், குடோன் மற்றும் ரைஸ் மில்லில் இடமில்லை எனவும், ஏற்றிச் செல்ல லாரி வரவில்லை எனவும் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பின்றி கிடப்பது வேதனையான விஷயம். குடோனில் இடமில்லை என்றால் அதற்கான மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். எனவே கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக குடோனுக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.