Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆதரவற்றோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை ஏற்பட்ட விவகாரம்: பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

தென்காசி: ஆதரவற்றோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை ஏற்பட்ட விவகாரத்தில் பலி 5ஆக உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே அன்னை முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு வாரத்திற்கு குறிப்பிட்ட முறையில் அசைவ உணவு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது. கடந்த ஜூன் 10ம் தேதி காப்பகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட பலருக்கு வாந்தி பேதி ஏற்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட நபர்கள் திடீரென மயங்கி விழத் தொடங்கியதால் முதியோர் இல்லத்தின் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோரை தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அனைவருக்கும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து அவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சங்கர் கணேஷ் (வயது 48), முருகம்மாள் (வயது 45), அம்பிகா (வயது 40) தனலட்சுமி ஆகிய 4 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா தலைமையிலான அதிகாரிகள் உடனடியாக முதியோர் காப்பகத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காப்பகத்தில் உணவு அருந்திய அனைவரையும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, காப்பகத்திற்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தென்காசி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் காப்பகத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது காப்பகத்தின் உரிமையாளர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று இடைக்கால் பகுதியைச் சேர்ந்த முப்பிடாதி (50) உயிரிழந்தார். செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 9 பேரில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.