Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசார பயணம் துரோகிகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை

சென்னை: 2026ல் மீண்டும் திமுக ஆட்சி அமைய ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரை தொடங்க உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும் 2026ம் ஆண்டிலும் வெற்றிகரமாக தொடர்ந்திட ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்ப்பு திட்டத்துடனான மாபெரும் பரப்புரை பயணத்தை உங்களில் ஒருவனான நான் தொடங்கி வைக்கிறேன்.

தமிழ்நாட்டுக்கான திட்டங்களை புறக்கணித்து, தமிழ் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களிடையே மதவாத பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்கு துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கான செயலியை அறிமுகம் செய்து, 234 தொகுதிகளிலும் அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில், அமைச்சர் ராஜா ஜூன் 25 அண்ணா அறிவாலயத்தில் சிறப்பான முறையில் பயிலரங்கை நடத்தியிருக்கிறார். இதில் பயிற்சி பெற்றுள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள், 234 தொகுதிகளிலும் உள்ள 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள கழகத்தின் இளம் நிர்வாகிகளுக்கு பயிற்சியளித்து,

மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் நிர்வாகிகள் வழிகாட்டுதலுடன் அவரவர் வாக்குச்சாவடிக்குப்பட்ட வீடு வீடாக சென்று, மக்களை நேரில் சந்தித்து, திராவிட மாடல் அரசின் திட்டங்களால் அந்த குடும்பம் பெற்றுள்ள பயன்களை உறுதி செய்து, ஓரணியில் தமிழ்நாட்டை கட்டமைக்கும் பணியை மேற்கொள்ள இருக்கிறார்கள். மாநில கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் இந்தியாவில் வேறெந்த இயக்கமும் செய்யாத அளவில் 68 ஆயிரத்துக்கும் அதிகமான டிஜிட்டல் வீரர்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

கழகத்தின் தொண்டர்கள் தமிழ்நாட்டு மக்களை கொண்டு ஓரணியில் தமிழ்நாட்டை கட்டமைப்பார்கள். இந்த செயல்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவது குறித்து ஆலோசனைகளை வழங்கிட இன்று (28ம் தேதி) மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் - சார்பு அணி செயலாளர்கள் - தொகுதி பார்வையாளர்கள் ஆகியோருடனான காணொலி கூட்டம் நடக்கிறது.

ஓரணியில் தமிழ்நாட்டை ஒருங்கிணைப்பதில் திமுக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தங்களை இணைத்து கொண்டு, புதிய உறுப்பினர்களை சேர்ப்பதிலும், திமுக அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதிலும், 2026ல் மீண்டும் திமுக ஆட்சியை அமைப்பதிலும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என உங்களில் ஒருவன் என்ற முறையில் அன்பு கலந்த உரிமையுடன் வலியுறுத்துகிறேன்.

தொண்டர்களையும் பொதுமக்களையும் அரவணைக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் பாதை தெளிவானது. பயணம் உறுதிமிக்கது. இடையூறுகள் - அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது. பெருமைமிக்க கழகத்தின் உடன்பிறப்பே வா! உன்னால் உருவாகும் ஓரணியில் தமிழ்நாடு! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.