Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாடுகள் செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை: ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கி, நேரக்கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என்று நேர கட்டுப்பாடு விதித்தும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. கடந்த பிப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்ட இந்த விதிகளை எதிர்த்து, பிளே கேம்ஸ் பிரைவேட் லிமிட்டெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் பிளேயர்ஸ் நலச்சங்கம் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், சிறப்பு அரசு வழக்கறிஞர் டி.சந்திரசேகரன், தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர் பி.அர்விந்த் வஸ்தா ஆகியோரும், மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகில் ரோத்தஹி உள்ளிட்டோரும் ஆஜராகி வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ரம்மி, போக்கர் போன்ற பணம் வைத்து விளையாடும் விளையாட்டுக்கள் பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளதால் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.

தமிழக அரசின் விதிகள் மத்திய அரசின் விதிகளுக்கு முரணாக இல்லை. நிபுணர் குழுவின் அறிக்கையில் அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஏற்படுத்தும் எதிர்மறை பாதிப்புகளை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது இந்த ஒழுங்குமுறை விதிகள் உடனடி தேவையாகிறது. மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகள் இன்னும் அமலுக்கு வராத நிலையில், வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தனது ஆளுமைக்குட்பட்ட பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை முறைப்படுத்த மாநில

அரசுக்கு அதிகாரம் உள்ளது.

ஆன்லைன் விளையாட்டுக்களால் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் பொது சுகாதாரத்துடன் நேரடி தொடர்பு கொண்ட இந்த ஆன்லைன் விளையாட்டுகளை அரசு முறைப்படுத்த முடியும். மக்கள் தீவிரமான மன மற்றும் உடல் ரீதியிலான தாக்கங்களுக்கு உள்ளாகும் போது அரசு மௌனம் காக்க முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொழில் புரியும் உரிமை வழங்கி உள்ள போதிலும், அதற்கு நியாயமான கட்டுப்பாடுகளும் உள்ளன. தொழில் புரியும் உரிமையை மக்கள் வாழ்வுரிமையை பாதிக்கும் செயல்களை செய்ய அனுமதிக்க முடியாது. மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. எனவே, இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. தமிழக அரசின் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

* தனது ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகளை முறைப்படுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது.

* மக்களின் சுகாதாரம் உள்ளிட்ட உரிமைகளை பாதுகாப்பது மாநில அரசின் கடமை.