Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சாத்தூர் அருகே பயங்கரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் பலி: 5 தொழிலாளர்கள் படுகாயம்

சாத்தூர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் சிவகாசியை சேர்ந்த கமல்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்து வருகின்றனர். மீனம்பட்டி, கன்னிசேரி, விருதுநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு வந்த தொழிலாளர்கள், மணி மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, மருந்து உராய்வு காரணமாக எதிர்பாராதவிதமாக திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அறையில் இருந்த தொழிலாளர்கள் சிலர் தீக்காயத்துடன் தப்பி ஓடினர். மற்றவர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். தீ மற்ற அறைகளுக்கும் பரவி பட்டாசுகள் பயங்கரமாக வெடித்து சிதறியதால் 6 அறைகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்தன. பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்ததால் சுமார் 10 கிமீ தூரத்திற்கு சத்தம் கேட்டு பொதுமக்கள் பட்டாசு ஆலைக்கு முன் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி, சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டு இருந்ததால் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகே கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் மீனம்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் (55), சூலக்கரையை சேர்ந்த வைரமணி, அனுப்பன்குளத்தை சேர்ந்த லட்சுமி, செல்லப்பாண்டி, ஓ.கோவில்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி, சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த புண்ணியமூர்த்தி, ராமஜெயம் (27), நாகபாண்டி (28) ஆகிய 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த அழகுராஜ் (28), மத்தியசேனை கருப்பசாமி (29), வீ.குமாரலிங்காபுரம் மணிகண்டன் (40), செவல்பட்டி லிங்கசாமி (45), சூலக்கரை முருகலட்சுமி (48) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்களை விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை எஸ்பி கண்ணன், சாத்தூர் கோட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். சாத்தூர் நகர் போலீசார் ஆலை உரிமையாளர் கமல்குமார், போர்மேன் ரவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் போர்மேன் ரவியை கைது செய்தனர். தலைமறைவான ஆலை உரிமையாளரை தேடி வருகின்றனர்.

* உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்- முதல்வர் உத்தரவு

முதல்வர் மு.க.ஸ்டாலின் வௌியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

* 20 நிமிடம் தாமதம் 50 பேர் தப்பினர்

பட்டாசு ஆலை வெடிவிபத்து காலை 8.15 மணிக்கு நடந்தது. அப்போது மணி மருந்து கலவை செய்யும் தொழிலாளர்கள் மட்டுமே ஆலைக்கு வந்து வேலை செய்து கொண்டிருந்தனர். 8.30 மணிக்கு மேல் விபத்து நடந்திருந்தால் கூடுதலாக 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி இருந்திருப்பார்கள். நல்லவேளையாக அவர்கள் தப்பினர்.