Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முனைவர் வெ.நல்லதம்பி எழுதியுள்ள “ஒலியலை ஒவியர்கள்” என்ற நூலினை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்!!

சென்னை: முனைவர் வெ.நல்லதம்பி எழுதியுள்ள “ஒலியலை ஒவியர்கள்” என்ற நூலினை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில், அமெரிக்க துணைத் தூதரக உதவித் தூதர் ஜீன் பிரகன்டி, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ஏழுமலை, பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு. தங்கராசு, இதழியல் மக்கள் தொடர்பியல் துறை இணைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் முனைவர் டி.ஆர். கோபாலகிருஷ்ணன் (பொறுப்பு), சென்னை பல்கலைக்கழக இதழியல் துறை உதவி பேராசிரியர் ஜெயசக்திவேல், சென்னை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குநர் கமலநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந. அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை: வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகசாலைக்கு தரவேண்டும் என்பார் பேரறிஞர் அண்ணா அவர்கள். நூல்கள் நம்மை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் மிகச் சிறந்த ஆயுதம். அனைவரும் படித்து, அறிந்து கொள்ள வேண்டுமென்ற உயர்ந்த சிந்தனையில் உதித்த முத்தாக ஒலியலை ஓவியர்கள் நூல் நம் கைகளை இன்று அலங்கரிக்கிறது. இளநிலை பருவத்தில் வானொலியின் வசம் நம் மனம் இருந்தது. ஆகாசவானியும், சிலோன் வானொலியும், சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை வானொலியின் ஒலிபரப்புகளும் எட்டாத மகிழ்ச்சியையும் நமக்கு அள்ளித்தந்தன. வானொலியின் வாயிலாக திரைப்படப் பாடல்களை கேட்டு மயங்கிய காலம் உண்டு. வானொலியின் செய்தி அது வழங்கிய தகவல்களையும் கேட்டு வளர்ந்தவர்கள் நாம். இன்றும் செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்றைய தலைமுறையினர் அந்த மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் அறிந்திடாதவர் என்றே சொல்லலாம். காரணம், சூழ்நிலையின் காரணம், உலக வளர்ச்சியின் காரணம், தொடர்பு சாதனங்கள் வளர்ச்சியின் காரணம் என்றும் சொல்லலாம். வானொலி வாயிலாக நம் மனம் என்னும் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டிருந்த ஆளுமை பற்றிய செய்திகளை அள்ளி தருகிறது ஒலியலை ஓவியர்கள் நூல் என்று சொல்லலாம். அந்த ஆளுமையுடன் நெருங்கிப் பழகியவர் என்பதால் நூலாசிரியர் ஆர்வமூட்டும் பல குறிப்புகளை இந்த நூலின் வாயிலாக நமக்கு தந்திருப்பதாக செய்திகள் வந்திருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகளும், பாராட்டுக்களையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு, கற்றனைத் தூறும் அறிவு” என்ற திருக்குறளுக்கு ஏற்றவாறு தோண்ட, தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போல, தொடர்ந்து படிக்க, படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும் என உரை எழுதியிருப்பவர் கலைஞர். தமிழ்நாட்டில் உலகத் தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கண்டவர், அவர் வழி நின்று மதுரையில் கலைஞர் நூலகத்தை உருவாக்கியவர் திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர். வாசிப்பின் பயனை உணர்ந்து வாசியுங்கள் உங்கள் வாழ்க்கை வளம்பெறும். வாசித்துவிட்டு தள்ளி வைக்கும் நூல் அல்ல இந்த ஒலியலை ஓவியர்கள்; வாசித்துவிட்டு பாதுகாத்து சேகரிப்பில் வைக்கும் பொக்கிஷம். மதிப்பிற்குரிய நூலாசிரியர் முனைவர் வே. நல்லதம்பிக்கு வாழ்த்துகள். காரணம் அவர் எந்த அளவிற்கு பணியில் தன்னை ஈடுபடுத்தி செயலாற்றியிருக்கிறார் என்பது இன்றைக்கும் அவருடைய தோற்றமும், இயல்பும் இங்கே படம்பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் அவரை நான் மீண்டும், மீண்டும் வாழ்த்தி வணங்குகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.