Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்

அருமனை: கேரளாவில் இருந்து அருமனை அருகே நெட்டா சோதனை சாவடி வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு காவல் துறையினர் விளக்கமளித்துள்ளனர். அருமனை கடையால்மூடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட நெட்டா பகுதி கேரள எல்லையில் அமைந்துள்ளது. இங்கு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வரும் வாகனங்களையும், இங்கிருந்து கேரளா செல்லும் வாகனங்களையும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக கேரளாவில் இருந்து வரும் சில வாகனங்கள் சோதனைச்சாவடியிலேயே சோதனை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும் பைக், காரில் வயது வந்தோர் துணையின்றி தனியாக வரும் இளம்சிறார்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சோதனைச்சாவடி காவல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: கேரளாவில் இருந்தும், இங்கிருந்தும் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைச்சாவடியில் வைத்து கடும் சோதனைக்கு பிறகே அனுப்பப்படுகிறது. பெரும்பாலான பள்ளி பருவ மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வரும்போது ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் கேட்கப்படுகிறது.

ஆனால் அது எதையுமே அவர்கள் கொண்டுவராததால் பயத்துடன் திரும்பி சென்றுவிடுகின்றனர். அதேபோல் நெட்டா பகுதியில் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. அவை மிகவும் ஆழமான தண்ணீர் நிறைந்த பகுதியாகும். எனவே பெற்றோர் உள்பட பெரியவர்கள் துணையின்றி வரும் சிறார்கள் இங்கு வந்து ஆபத்தில் சிக்கி விடுகிறார்கள். அதனை தடுக்க வேண்டும். அதேபோல் சிறுவர், சிறுமிகள் இப்பகுதிக்கு வந்து லாட்ஜுகளில் அறை எடுத்து தங்குகின்றனர். அப்போது சட்டவிரோத செயல்கள் அதிகம் நடக்கிறது. எனவே தகுந்த ஆவணங்களுடன் வராதவர்கள், மதுபாட்டில் கொண்டுவருபவர்கள் ஆகியோருக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது.

சிறுமிகளை பைக்கில் அழைத்து வரும் வாலிபர்கள் சோதனைச்சாவடியில் காவலர்கள் நிற்பதை பார்த்ததுமே திரும்பி ஓடி விடுகிறார்கள் என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் இதனால் மட்டுமே சிறார்களின் அட்டூழியம் குறைவதில்லை. மாறாக அவர்கள் வேறு பகுதி வழியாக சுற்றி வந்து மார்த்தாண்டம், மேல்புறம் போன்ற இடங்கள் வழியாக சாலை மார்க்கமாக வந்துவிடுகின்றனர். அங்கு இதுபோன்ற கெடுபிடிகள் எதுவும் இல்லை. இதையடுத்து அவர்கள் நினைத்த இடத்திற்கு வந்து மது அருந்துகிறார்கள், சில்மிஷங்களில் ஈடுபட்டு சென்று விடுகிறார்கள் என்பது தான் உண்மை.

குமரி மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலாத்தலங்களில் உள்ள ஓட்டல்களில் பள்ளி, கல்லூரி சீருடையில் ஜோடியாக வரும் மாணவ, மாணவிகளுக்கு அறை எடுத்து தங்க அனுமதி கொடுக்கின்றனர். ஆனால் நெட்டா பகுதியில் மட்டும் இப்படி கெடுபிடி காட்டுவது சரியல்ல என அங்குள்ள லாட்ஜ், ஓட்டல் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்குகின்றனர். நெட்டா போன்ற இயற்கை பசுமை நிறைந்த பகுதிகளை சுற்றுலாத்தலமாக மாற்றினால் சிலர் இங்கு திருட்டுத்தனமாக வந்து தங்குவதும், நீர்நிலைகளில் சிக்கி உயிரிழப்பதும் தடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.