நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்: பிரம்பால் தாக்கி, செருப்பை வீசும் வீடியோ வைரல்; மனித உரிமை ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை
நெல்லை: நெல்லை, புதிய பேருந்து நிலையம் அருகே கேரளாவைச் சேர்ந்த ஜலாலுதீன் அகமத் என்பவர் ‘ஜல்’ நீட் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இவர் ஏற்கனவே பிரபல நீட் பயிற்சி மையத்தில் வேதியியல் பாடப்பிரிவில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்து வந்தார். இதனால் நெல்லை மற்றும் நெல்லை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர் தங்களது பிள்ளைகளை இங்கு சேர்த்துள்ளனர். ஒவ்வொரு மாணவரிடமும் ஆண்டு பயிற்சி கட்டணமாக ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சி மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி வழங்கப்படுகிறது.


இதுகுறித்து பயிற்சி மைய உரிமையாளர் ஜலாலுதீன் அகமத் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், நெல்லையில் மனித உரிமை ஆணைய மனுக்கள் குறித்த விசாரணைக்காக முகாமிட்டிருந்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேற்று மாலை திடீரென ஜல் நீட் பயிற்சி மையத்திற்கு நேரில் சென்று பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் 4 மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் தாக்குதலில் காயமடைந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் போலீசாரிடம் வழக்கு விவரம் மற்றும் விசாரணை குறித்து கேட்டறிந்தார்.


