Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீட் தேர்விற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி நன்றி: கூட்டுக்கடமை இருப்பதாக கடிதம் வாயிலாக தகவல்

சென்னை: நீட் தேர்விற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை விளிம்பு நிலை மாணவர்கள் மீது உண்டாக்கும் பாதிப்பு குறித்தும் இது கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக, ஜூன் 4ம் தேதி நீட் - இளநிலை முடிவுகள் குறித்த தேதிக்கு முன்னரே வெளியான பிறகு, மாணவர்களின் நீதிக்காக காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையின் பெருந்தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களை கடந்த ஒரு மாதத்தில் சந்தித்தேன். அதன்படி, 24 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது நான் ஆற்றிய உரையும், நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவனத்தை ஈர்த்தது.

தனியார் பயிற்சி நிறுவனங்களுக்குச் செல்ல முடியாததும் பிற வசதிவாய்ப்புகள் இல்லாததும் கிராமப்புறத்தில் உள்ள திறமையான மாணவர்கள் சமவாய்ப்புடன் போட்டி போட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது நம்முடைய பொதுக் கல்வி நெறிமுறைகளுக்கு எதிரானதாகும். மேலும், மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு மருத்துவ கல்லூரிகளில் வசதிவாய்ப்புள்ள சிலருக்கு மட்டும் வாய்ப்பு கிடைப்பதை தடுக்கும் கூட்டுக்கடமை நமக்கு உள்ளது.

பொது மருத்துவ கல்வி முறையை கட்டமைப்பதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உள்ளது. இதன் விளைவாக வலுவான பொது சுகாதார அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டும். கடந்த ஜூன் 28ம் தேதி தாங்கள் எழுதி அனுப்பிய கடிதத்துக்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் தங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.