முர்ஷிதாபாத் கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அமித் ஷாவை பிரதமர் மோடி கண்காணிக்க வேண்டும்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் நடந்த சமீபத்திய வகுப்பு வாத வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும் பிஎஸ்எப் மற்றும் மத்திய படைகள், பாஜ உள்ளிட்டவற்றுக்கு இதில் பங்கு உள்ளதாகவும் முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
இந்நிலையில் கொல்கத்தாவில் இஸ்லாமிய சமூகத்தினரின் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது, ‘‘அண்டை நாடான வங்கதேசத்தில் கொந்தளிப்பான சூழல் இருந்தபோதிலும், ஒன்றிய அரசு வக்பு திருத்த சட்டத்தை அவசரமாக இயற்றியது. சட்டவிரோத எல்லை தாண்டிய ஊடுருவலை அனுமதித்தது. இது இரண்டும் மேற்கு வங்கத்தில் அமைதியின்மைக்கு பங்களித்தது. இதேபோல் எல்லைப்பாதுகாப்பு படை மற்றும் பிற ஏஜென்சிகள் மேற்கு வங்கத்தில் அமைதியின்மையை தூண்டுவதில் முக்கிய பங்கு வகித்தது.
வக்பு திருத்த சட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்த கூடாது என்று வலியுறுத்துகிறேன். இது நாட்டை பிளவுபடுத்தும். அமித் ஷாவை பிரதமர் கண்காணிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவர் தனது சொந்த அரசியல் நலன்களுக்காக நாட்டிற்கு மிகவும் தீங்கு விளைவித்து வருகின்றார். அவர் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்? அவர் ஒருபோதும் பிரதமராக முடியாது. உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏஜென்சிகளை எவ்வாறு தவறாக பயன்படுத்துகிறார் என்பதை பிரதமர் பார்க்க வேண்டும்” என்றார்.
* பெண்கள் மீதான வன்முறை குறித்து விசாரிக்க குழு
முர்ஷிதாபாத்தில் கடந்த 11 மற்றும் 12ம் தேதி வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின்போது சுதி, துலியன் மற்றும் ஜாங்கிபூர் உள்ளிட்ட சில பகுதிகளில் வன்முறை வெடித்தது. வன்முறையின்போது ஏராளமான பெண்கள் துன்புறுத்தப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேசிய மகளிர் ஆணையம் குழு அமைத்துள்ளது.


