Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரையில் நாளை மறுநாள் திமுக பொதுக்குழு கூட்டம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை 25 கி.மீ. ரோடு ஷோ: தமிழகத்தில் முதல்முறை

மதுரை: மதுரை உத்தங்குடியில் நாளை மறுநாள் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையொட்டி, 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளன. இதையொட்டி தமிழகத்தில் முதல் முறையாக நாளை நடக்கும் 25 கி.மீ. ரோடு ஷோவில் முதல்வர் பங்கேற்கிறார். சென்னையில் கடந்த 3ம் தேதி திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், வரும் ஜூன் 1ம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, மதுரையில் 47 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுதினம் திமுக பொதுக்குழு கூடுகிறது. இதில், திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்பர். இதையொட்டி, மதுரை மேலூர் ரோட்டில் உள்ள உத்தங்குடியில் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுக்குழுவில் கலந்து கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணா அறிவாலய முகப்பு

பொதுக்குழு கூட்ட திடலின் முகப்பு சென்னை அண்ணா அறிவாலயம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. திடலின் முன்புறம் பிரமாண்ட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவே செயற்கை நீரூற்றும், அதன் மத்தியில் 100 அடி உயர கொடி கம்பத்தில் திமுகவின் பிரமாண்ட இருவண்ணக் கொடியும் பறக்கிறது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு திமுக தலைமைக் கழகத்திலிருந்து அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்துடன் வருபவர்களுக்கு பொதுக்குழு அரங்கின் அருகே ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு அழைப்பிதழ்களை வழங்கி தங்களது வருகையை பதிவு செய்த பின்னர் பொதுக்குழு அரங்கிற்குள் செல்வதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படும்.

பிரமாண்ட மேடை

அனுமதி சீட்டு பெற்றவர்கள், பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முற்றிலும் குளிரூட்டப்பட்ட பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் விசாலமாக அமரும் வகையில் இருக்கைகள் போடப்படுகின்றன. திமுக தலைமைக்கழக நிர்வாகிகள் அமர்வதற்கு என சிறப்பு இருக்கைகளும், கலைஞர் அரங்கம் என்ற பெயரில் பிரம்மாண்ட மேடையும், எல்இடி திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணிக்கு துவங்கும் பொதுக்குழு கூட்டம் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற உள்ளது.

சாதனை பதாகைகள்

பொதுக்குழு கூட்டம் நடைபெறும் பகுதி முழுவதும் திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் வகையில் பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லும் வழி மற்றும் முக்கிய சாலைகள் என மதுரை மாவட்டத்தின் 60 கிமீ சுற்றளவிற்கு சாலை ஓரமாக திமுகவின் கொடிகள் பறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பொதுக்குழு அரங்கத்திற்கு பின்புறமாக வாகனங்களை சிரமமின்றி நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி தலைமையில் பொதுக்குழு கூட்டத்திற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அறுசுவை உணவு

பொதுக்குழுவில் பங்கேற்பவர்களுக்கு அசைவ மற்றும் சைவ உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன. அவ்வாறு அறுசுவை உணவு பரிமாறவும், சமைக்கவும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் மற்றும் ஊழியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். பொதுக்குழுவிற்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வரும் என்பதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மூன்று சாலைகள் பொதுக்குழு திடலை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. திமுகவின் முக்கிய தலைவர்கள் வருவதற்கு ஒரு சாலையும், இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் வருவதற்கு ஒரு சாலை, பொதுக்குழு உறுப்பினர்கள் வருவதற்கு ஒரு சாலை என தனித்தனி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

25 கி.மீ. ரோடு ஷோ...

மதுரை திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாளை (மே 31) காலை 11 மணிக்கு விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகிறார். விமான நிலையத்தில் மதுரை வடக்கு, மதுரை மாநகர் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து முதல்வர் அவனியாபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்கிறார். பின்னர் மாலையில் 25 கிமீ தூரத்திற்கு நடக்கும் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார். மாலையில் அவனியாபுரத்திலிருந்து தனது ரோடு ஷோவை துவங்கும் முதல்வர், ஜீவா நகர், ஜெய்ஹிந்த்புரம் வழியாக பழங்காநத்தம் பகுதியை சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து பைபாஸ் ரோடு வழியாக காளவாசல், குரு தியேட்டர் பகுதிக்கு வந்து அங்கிருந்து ஆரப்பாளையம் கிராசில் அமைந்துள்ள திருமலை நாயக்கர் சிலை வரை ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து புதுஜெயில் ரோடு, மதுரா கோட்ஸ் வழியாக ரோடு ஷோ செல்கிறார். அப்போது புது ெஜயில் ரோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், மதுரை மாநகராட்சியின் முதல் மேயருமான முத்து சிலையை முதல்வர் திறந்து வைக்கிறார். முதல்வரின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கின்றனர். முதல்வரின் ரோடு ஷோ திருப்பரங்குன்றம், மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய 3 தொகுதிகளை இணைக்கும் வகையில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மேற்பார்வையில், மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ, தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் ஆகியோர் செய்து வருகின்றனர்.