Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேகாலயா ஹனிமூன் கொலை புதுப்பெண், காதலன் உள்பட 5 பேர் கோர்ட்டில் ஆஜர்: 8 நாள் போலீஸ் காவல்

ஷில்லாங்: மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் புதுப்பெண், காதலன் மற்றும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மேகாலயாவிற்கு ஹனிமூன் சென்ற ராஜா ரகுவன்ஷியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி, காதலன் ராஜ் குஷ்வாஹா, ஆகாஷ் ராஜ்புத், விஷால் சிங் சவுகான், ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நேற்று அவர்கள் அனைவரும் மேகாலயா அழைத்துச்செல்லப்பட்டனர். அவர்களை போலீசார் ஷில்லாங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது சோனம் உள்பட அனைவரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். ஆனால் 8 நாள் அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கை விசாரித்து வரும் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட எஸ்பி விவேக் சையம் கூறுகையில்,’ சோனம் கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை கண்டறிய சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் கர்ப்பம் இல்லை என்பது தெரிய வந்தது. இருப்பினும் 24 மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு சோதனை அவருக்கு நடத்தப்படும். குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரையும் சிறப்பு விசாரணைக்குழு முழுமையாக விசாரிக்கும். எனவே யூகங்களாக எதையும் வெளியிட வேண்டாம். சிசிடிவி காட்சிகள், செல்போன் அழைப்புகள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் இந்த விசாரணை நடந்து, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பிறகு கொலை நடந்த சிரபுஞ்சிக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள்’ என்று தெரிவித்தார். இதற்கிடையே சோனம் மொபைல் போன் இன்னும் கிடைக்கவில்லை. அதை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. சோனத்தின் தயாரிடம் திருமணத்திற்கு சோனம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதை அவர் ஏற்காததால், ராஜா ரகுவன்ஷியை திருமணம் செய்து கொள்வேன் ஆனால் அதற்கு பிறகு அந்த நபரை என்ன செய்வேன் என்று நீங்கள் பார்ப்பீர்கள். அதன் விளைவுகளை நீங்கள் தாங்கிக்கொள்ள வேண்டும்’ என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

* ராஜாவின் தாயாரை கட்டிப்பிடித்து சோனம் சகோதரர் ஆறுதல்

சோனமின் சகோதரர் கோவிந்த் ரகுவன்ஷி நேற்று இந்தூரில் உள்ள ராஜாவின் வீட்டிற்கு சென்றார். அங்கு ராஜாவின் தாயார் உமாவை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு ஆறுதல் கூறினார்.அதன்பிறகு அவர் கூறுகையில்,’ இந்த விவகாரத்தில் ராஜாவின் குடும்பத்துடன் நான் இருப்பேன். அவர்களுக்கு நீதி கிடைக்க சட்டப் போராட்டம் நடத்துவேன் என்றும் அறிவித்துள்ளேன்’ என்றார். ராஜாவின் தாயார் உமா கூறுகையில்,’ எனது மகன் ராஜா மரணத்தால் கோவிந்த் மிகவும் வேதனை அடைந்துள்ளார். இதற்கு காரணமான அவரது சகோதரியை தூக்கிலிட வேண்டும் என்று கோவிந்த் கூறினார். சோனமை சந்தித்தீர்களா என்று கோவிந்திடம் கேட்டேன். மூன்று நிமிடங்கள் சந்தித்ததாக அவர் கூறினார். ஏன் அவரை அடிக்கவில்லை என்று கேட்டேன். ஊடகங்களும் காவல்துறையும் இருந்ததால் அந்த வாய்ப்பு தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்’ என்றார்.