கூட்டணி பற்றி விமர்சனம் செய்தால் வேற மாறிப்போகும் இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்... பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
ஓமலூர்: கூட்டணி பற்றி விமர்சனம் செய்தால், வேறு மாதிரி போய் விடும். இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சேலம் மாவட்டம், ஓமலூரில் நேற்று சேலம் மற்றும் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய மாவட்ட பாஜ தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். முன்னதாக அவர் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அந்த ஜீப்பில் மாங்காய்கள் மற்றும் தாமரை மலர்கள் கட்டிய மாலை கட்டப்பட்டிருந்தது. பின்னர் நடந்த கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: தவறான மீம்ஸ் போட்டால் காவல்துறை கைது செய்கிறது. எனவே, சமூக வலைத்தளங்களில் இயங்கும் அனைவரும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.
கூட்டணி பற்றி விமர்சனம் செய்தால், வேறு மாதிரி போய்விடும். நமது கூட்டணி உறுதியான கூட்டணி. நியாயமான, நேர்மையான, ஊழலற்ற கூட்டணி. இரட்டை இலைக்கு மேலே, தாமரை மலர்ந்தே தீரும். யாருக்கு எத்தனை தொகுதிகள், எந்த இடம் என்பதை அமித்ஷா, இபிஎஸ் முடிவு செய்வார்கள். என்னுடைய அதிகாரம், தொண்டர்களை பாதுகாப்பதுதான். கட்சியை வளர்க்க வேண்டும் என்பது என்னுடைய நிலை. எனக்கு மேலே இருக்கிற தலைமை எடுக்கும் முடிவை ஏற்பது தான், கட்சி நிர்வாகிகளின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழக அரசுக்கு அதிக அதிகாரம் வேண்டும், அதிக நிதி வேண்டும் என்பதில் எங்களுக்கு தயக்கமோ, மாறுபட்ட கருத்தோ கிடையாது.
நீட் தேர்வை யாராலும் ரத்து செய்ய முடியாது. ஆனால், அதற்கு தீர்மானம் போடுகிறார்கள். கச்சத்தீவு மீண்டும் வராது. பிரதமர் நினைத்தால் மட்டுமே நமக்கு கிடைக்கும். தீர்மானங்களை மட்டுமே போட்டால் போதுமா?. ஒன்றிய அரசோடு கலந்து பேசி, நல்ல உறவு வைத்திருந்தால் மட்டுமே ஆட்சி நன்றாக இருக்கும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.


