Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

லாஸ் ஏஞ்சல்சில் கண்ணீர்ப்புகை, மிளகுப் பொடி, ஒலி-ஒளி குண்டு வீச்சு தேசிய பாதுகாப்பு படையை அனுப்பியது சட்டவிரோதம்: அதிபர் டிரம்ப்புக்கு எதிராக மாநில ஆளுநர்கள் ஆவேசம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: லாஸ் ஏஞ்சல்சில் வன்முறையை ஒடுக்க கண்ணீர்ப்புகை, மிளகுப் பொடி, ஒலி-ஒளி குண்டு வீச்சு நடந்த நிலையில், அங்கு தேசிய பாதுகாப்பு படையை அனுப்பியது சட்டவிரோதம் என்று அதிபர் டிரம்ப்புக்கு எதிராக மாநில ஆளுநர்கள் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்ட​விரோத​மாக​வும் குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் நாடு கடத்தி வருகிறார்.

அந்த வகையில் முறையான ஆவணங்கள் இல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அத்துமீறி தங்கியிருந்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடங்கின. கடந்த வாரம் முழுவதும் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில் 100க்கும் மேற்பட்ட குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து, கடந்த வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மையப்பகுதியில் போராட்டங்கள் வெடித்தன.

சனிக்கிழமையன்று, லத்தீன் அமெரிக்கர்கள் அதிகம் வசிக்கும் பாரமவுண்ட் மற்றும் காம்ப்டன் நகரங்களுக்கும் இந்தப் போராட்டம் பரவியது. பாரமவுண்டில், போராட்டக்காரர்கள் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் வாகனங்களை மறிக்க முயன்றபோது, அவர்கள் மீது கற்கள் மற்றும் சிமென்ட் துண்டுகள் வீசப்பட்டன. இதற்குப் பதிலடியாக, கலவர தடுப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகள், மிளகுப் பொடி குண்டுகள் மற்றும் ஒலி-ஒளி குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர்.

இந்தப் பின்னணியில் மேலும் பதற்றம் அதிகரித்து வந்தது. கடந்த இரண்டு நாள் பதற்றங்களைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நிலைமை மேலும் மோசமடைந்தது. அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில், சுமார் 300 தேசியப் பாதுகாப்புப் படையினர் லாஸ் ஏஞ்சல்ஸில் குவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கினர். அவர்கள் நகரின் முக்கிய நெடுஞ்சாலையான 101-ஐ மறித்து, தானியங்கி வாகனங்களுக்குத் தீ வைத்தனர்.

குடியேறியவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நகரின் மையப்பகுதியான மெட்ரோபொலிட்டன் தடுப்புக் காவல் மையத்தின் முன்பு கூடிய போராட்டக்காரர்கள், தேசியப் பாதுகாப்புப் படையினரைப் பார்த்து ‘வெட்கக்கேடு; திரும்பிச் செல்லுங்கள்’ என முழக்கமிட்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த, உள்ளூர் காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகள், ரப்பர் குண்டுகள் மற்றும் ஒலி-ஒளி குண்டுகளைப் பயன்படுத்தியது. குதிரைப்படை போலீசாரும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர்.

மாகாண ஆளுநரின் அனுமதியின்றி தேசியப் பாதுகாப்புப் படையை அனுப்பிய அதிபர் டிரம்பின் செயல், பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் கூறுகையில், ‘மாநில இறையாண்மையை மீறும் கடுமையான செயலை அதிபர் டிரம்ப் செய்துள்ளார். பாதுகாப்பு படையினரை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்’ என்று டிரம்புக்குக் கடிதம் எழுதியுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் கூறுகையில், ‘இந்த போராட்ட குழப்பம் டிரம்ப் நிர்வாகத்தால் தூண்டப்பட்டது’ என்று குற்றம் சாட்டினார்.

ஆனால் அதிபர் டிரம்ப், ‘லாஸ் ஏஞ்சல்ஸில் வன்முறையாளர்கள் உள்ளனர்; மிக வலுவான சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும்; தேவைப்பட்டால் மேலும் துருப்புகளை அனுப்பத் தயங்க மாட்டோம்; குடியேறியவர்களை நாடு கடத்துவதற்குத் தடையாக இருக்கும் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவர் எச்சரித்துள்ளார். கடந்த 1965ம் ஆண்டுக்குப் பிறகு, ஒரு மாநில ஆளுநரின் கோரிக்கை இல்லாமல், தேசியப் பாதுகாப்புப் படை அனுப்பப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு, நாட்டை சர்வாதிகாரப் போக்கை நோக்கி நகர்த்துகிறது என செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் போன்றோர் விமர்சித்துள்ளனர்.