Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குமரி முழுவதும் விடிய விடிய மழை; பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 53 அடியானது: ஒரே நாளில் 150 இடங்களில் மின்கம்பங்கள் சரிந்தன

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. சூறை காற்று காரணமாக நேற்று மாலையில் இருந்து இரவு வரை 150 இடங்களில் மின் கம்பங்கள் சரிந்தன. மலையோர கிராமங்கள் இருளில் மூழ்கின. தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாக சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளிலும் பெய்து வரும் மழை காரணமாக, அணைகளுக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. சூறை காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. 300க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன.

நேற்று மாவட்டம் முழுவதும் சூறை காற்று வீசியது. இதில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. மலையோர கிராமங்களில் மரங்கள் முறிந்து விழுந்து, மின் கம்பங்கள் உடைந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் கிராமங்கள் இருளில் மூழ்கின. நகர பகுதிகளிலும் சூறைகாற்றால் மரங்கள் முறிந்து விழுந்து, மின் ஒயர்கள் அறுந்தன. இதனால் நாகர்கோவிலிலும் பல்வேறு இடங்களில் நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய பணியாளர்கள், தீயணைப்பு துறையினர் இணைந்து மரங்கள் மற்றும் மின் கம்பங்களை சரி செய்தனர். அதன் பின்னர் மின் வினியோகம் இருந்தது. மாவட்டம் முழுவதும் நேற்று மிதமான மழை இருந்தது. மலையோர பகுதிகளில் மழை காரணமாக பெருஞ்சாணி அணைக்கான நீர் வரத்தும் உயர்ந்துள்ளது. நேற்று 1088 கன அடி தண்ணீர் பெருஞ்சாணி அணைக்கு வந்து கொண்டிருந்தது.

நேற்று பெய்த மழை காரணமாக இன்று காலை அணைக்கான நீர்வரத்து உயர்ந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கான நீர் வரத்து 1878 கன அடியாக உயர்ந்தது. பேச்சிப்பாறை அணைக்கு 1445 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 53.1 அடியாக உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் 41.65 அடியாக உள்ளது. சிற்றார்1, 7.28, சிற்றார் 2, 7.38 அடியாக உள்ளன. பொய்கை 15.2 அடியாகவும், மாம்பழத்துறையாறு 30.68 அடியாகவும் உள்ளன. முக்கடல் அணை மைனஸ் 16.5 அடியாக உள்ளது. மழை இன்னும் இரு நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இன்று காலையிலும் மாவட்டம் முழுவதும் மழை நீடித்து வருகிறது. நாகர்கோவிலில் நேற்று இரவு முதல் தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.

இன்று காலையில் பெய்த மழை காரணமாக அலுவலகங்களுக்கு சென்றவர்கள், கல்லூரிகளுக்கு சென்றவர்கள் பெரும் சிரமம் அடைந்தனர். மார்த்தாண்டம், தக்கலை, பூதப்பாண்டி, சீதப்பால், தடிக்காரன்கோணம், குலசேகரம், திருவட்டார், திற்பரப்பு , அருமனை, களியல் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மாவட்டத்தில் ரப்பர் பால் வெட்டும் தொழில், உப்பளம், செங்கல் சூளை தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் கடந்த ஒரு வாரமாக வேலை இழந்துள்ளனர். மழை நீடிப்பதால் அணைகளுக்கான நீர் வரத்து உள்ளதால் நீர் மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மின் வாரிய பணியாளர்கள், தீயணைப்பு துறை பணியாளர்கள் 24 மணி நேரமும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் நேற்று 150க்கும் மேற்பட்ட இடங்களில் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

நாகர்கோவில் தீயணைப்பு துறை அலுவலக எல்லை பகுதியில் மட்டும் நேற்று காலையில் இருந்து இன்று காலை வரையிலான 24 மணி நேரம் நிலவரப்படி 40க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன. இதில் ஈத்தாமொழி அருகே வீட்டின் மீது விழுந்த மரத்தால், வீட்டில் சிக்கிய கணவன், மனைவி இருவரையும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். வெள்ளிச்சந்தை சரல் பகுதியில் வீசிய சூறை காற்றால், 6 க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சரிந்தன. இதனால் சரல் டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் வசதி பெறும், கிராமங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மலையோர கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதை சரி செய்யும் பணிகள் நடக்கின்றன. சீதப்பால், சந்தைவிளை, தெரிசனங்கோப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் மின் கம்பங்கள் சரிந்ததால் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. இவற்றை சரி செய்யும் பணிகள் வேகமாக நடக்கின்றன.

மழை அளவு

குமரி மாவட்டத்தில் பெய்துள்ள மழை அளவு (மி.மீ.) வருமாறு : ெகாட்டாரம் 41.4, மயிலாடி 35.4, நாகர்கோவில் 36.2, கன்னிமார் 34.2, ஆரல்வாய்மொழி 22, பூதப்பாண்டி 27.6, முக்கடல் 28.2, பாலமோர் 52.6, தக்கலை 28, குளச்சல் 24, இரணியல் 15, அடையாமடை 32, குருந்தன்கோடு 27.4, கோழிப்போர்விளை 40.6, மாம்பழத்துறையாறு 38.4, ஆணைக்கிடங்கு 35.8, சிற்றார் 1, 40.8, சிற்றார்2, 24.2, களியல் 22, குழித்துறை 19, பேச்சிப்பாறை 40.4, பெருஞ்சாணி 28.2, புத்தன் அணை 25.4, சுருளகோடு 38.4, திற்பரப்பு 29, முள்ளங்கினாவிளை 38.2 .