Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

லெபனானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா அமைதிப் படை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் படைக்கு உலக நாடுகள் கண்டனம்.!!

லெபனான்: லெபனானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா அமைதிப் படை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் படைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கிடையே லெபனானில் சேவையில் இருக்கும் 900 இந்திய வீரர்களின் கதி என்ன? என்பது கேள்வியாக உள்ளது. மத்திய கிழக்கு நாடான லெபனான் அரசின் ஆட்சியை உறுதி செய்வதற்காகவும், ஆயுதக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் லெபனான் ராணுவத்துக்கு ஆதரவாக செயல்படுவதற்காகவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் கடந்த 1978ம் ஆண்டு அமைக்கப்பட்ட அமைதிப் படையானது, ‘லெபனானுக்கான ஐ.நா.வின் இடைக்காலப் படை’ (யுனிஃபில்) என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

லெபனான் மீதான இஸ்ரேல் படையெடுப்பு, 2006ம் ஆண்டுப் போர் போன்ற நிகழ்வுகளின்போது ஐ.நா இலக்குகள் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டன.தற்போது அந்த அமைதிப் படை, போராலும் நிவாரணப் பணிகளுக்கு உதவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.அந்தப் படையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவ வீரர்கள் சேவையாற்றி வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே தீவிர மோதல் நடைபெற்று வரும் நிலையில், லெபனானில் கடுமையாக வான்வழித் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், தங்கள் நிலைகளிலிருந்து யுனிஃபில் படையினர் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியது.

ஆனால், அமைதிப் படை நிராகரித்தது. இந்நிலையில் தெற்கு லெபனானில் உள்ள யுனிஃபில் தலைமையகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஐ.நா. அமைதிப் படையின் நிலைகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் இரண்டு இந்தோனேசிய வீரர்கள் காயமடைந்தனர். ஐ.நா அமைதிப்படை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் படைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டு தூதருக்கு பிரான்ஸ் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே, தெற்கு லெபனானில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.நா அமைதிப்படையின் பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. அதில், ‘இஸ்ரேல்-லெபனான் எல்லையில் உள்ள நீலக் கோடு பகுதியில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவது கவலையளிக்கிறது.

ஐநா மையங்களில் உள்ள கட்டுப்பாடுகளை அனைவரும் மதிக்க வேண்டும். ஐ.நா அமைதி காக்கும் படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் நடத்திய லெபனான் பகுதியில் 900க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள், ஐ.நா அமைதி படையில் பணியாற்றி வருகின்றனர். இஸ்ரேல்-லெபனான் எல்லையில் 120 கிலோமீட்டர் நீலக் கோட்டில் தங்கள் சேவையை மேற்கொண்டுள்ளனர். இந்த வீரர்கள் அசாம் ரெஜிமென்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். எனினும், அவர்கள் நாடு திரும்புவது தொடர்பான முடிவை ஐக்கிய நாடுகள் சபையே எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, கோலன் குன்றுகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த ராணுவ வீரர் சுரேஷ் என்பவரை இந்தியா அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலியப் படைகள் வேண்டுமென்றே ஐ.நா வளாகங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், கண்காணிப்பு கேமராக்களை அழித்ததாகவும் ஐ.நா. ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அனைத்து நாடுகளுக்கும் உள்ளது என்பதை ஐநா வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது. லெபனான் - இஸ்ரேல் இடையிலான மோதலுக்கு மத்தியில், ஐ.நா அமைதிப்படையினர் மீதான தாக்குதல் விவகாரம் சர்வதேச அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.