கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு சாலையில் உள்ள வணிக வளாகத்தில், சரண்யா நகரை சேர்ந்த நவீன் (28) கூல்ட்ரிங்க்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே பஜார் பகுதியை சேர்ந்த குமார் (48), செல்போன் கடை நடத்தி வருகிறார். 3வதாக ராஜகோபால் (56) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து 3 பேரும் கடைகளைப் பூட்டிவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.
இன்று காலை ரெட்டம்பேடு சாலையில் நடைபயிற்சி சென்ற பலர், அங்குள்ள நவீன், குமார், ராஜகோபால் ஆகிய 3 பேரின் கடைகள் உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் 3 கடைகளின் உரிமையாளர்களை வரவழைத்தனர். போலீசார் நடத்திய சோதனையில் குமாரின் கடையில் இருந்த ₹10 ஆயிரம் மதிப்பிலான செல்போன் உதிரிபாகங்கள், நவீனின் கூல்ட்ரிங்க்ஸ் கடையில் இருந்த 8 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
மேலும், ராஜகோபால் மளிகை கடையை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். 3 மளிகைக் கடைகளை உடைத்து 2 மர்ம நபர்கள் புகுந்த காட்சிகளை வைத்து, அவர்கள் இருவரையும் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.


