பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசத்தில் கும்பமேளா நடக்கும் பகுதி புதிய மாவட்டமாக அறிவித்து உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அடுத்தாண்டு ஜனவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெறுகிறது. லட்சக்கணக்கான மக்கள் கங்கையில் புனித நீராடி வழிபாடு செய்வார்கள் என்பதால், அதற்கான ஏற்பாடுகளை உத்தரபிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பிரயாக்ராஜின் மகா கும்பமேளா பகுதியை புதிய மாவட்டமாக அறிவித்துள்ளது.
இந்த புதிய மாவட்டத்திற்கு ‘மகா கும்பமேளா ஜன்பாத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கும்பமேளா நிகழ்வை சுமூகமாக நிர்வகிப்பதற்கும், நிர்வாகப் பணிகளை சிறந்த முறையில் நடத்துவதற்கும் இந்த புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் மொத்தம் 75 மாவட்டங்கள் உள்ளன. தற்போது 76வது மாவட்டம் உருவாகி உள்ளது. கும்பமேளா மாவட்டத்தில் பிரயாக்ராஜ் மாவட்டத்திற்கு உட்பட்ட தெஹ்ஸில் சதார், சோராவ்ன், புல்பூர் மற்றும் கர்ச்சனா 4 வட்டங்களுக்கு உட்பட்ட 67 கிராமங்களும் இணைக்கப்பட்டுள்ளன.


