Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

வரும் 7ம் தேதி கும்பாபிஷேக விழா திருச்செந்தூருக்கு 600 சிறப்பு பஸ்கள்: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை: வரும் 7ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பக்தர்கள் செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் 8ம் தேதிவரை 600 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் வரும் 7ம் தேதி மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கும்பாபிஷேக விழாவுக்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஜூலை 7ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் இன்று (4ம் தேதி) முதல் வரும் 6ம் தேதிவரை சென்னை, திருச்சி, புதுச்சேரி, கும்பகோணம், சேலம், பெங்களூரு, தஞ்சாவூர், கோயம்புத்தூர், ஈரோடு, நாகப்ட்டினம் ஆகிய இடங்களிலிருந்து திருச்செந்தூருக்கும் மற்றும் 7ம் தேதி திருச்செந்தூரிலிருந்து பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பி வருவதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பக்தர்கள் கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை கோட்டம் மூலம் நாளை முதல் 8ம் தேதி வரை4 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், மதுரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு தற்போது இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சுமார் 600 சிறப்பு பஸ்கள் பக்தர்களின் நலன் கருதி இயக்கப்படுகிறது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் 3 தற்காலிக பஸ் ஸ்டாண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நெல்லை சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிறுத்தத்தில் நெல்லை, பாபநாசம், தென்காசி, சுரண்டை, சங்கரன்கோவில், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களும், தூத்துக்குடி சாலையிலுள்ள ஆதித்தனார் சிலைக்கு எதிர்புறம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிறுத்தத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, ராமேஸ்வரம், அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சி, சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களும், திருச்செந்தூர் பிள்ளையார் கோயில் தெப்பக்குளம் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் சாத்தான்குளம், திசையன்விளை, வள்ளியூர், நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களும் வந்து செல்ல வசதியாக பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த 3 தற்காலிக பஸ் நிலையத்திலிருந்தும் தலா 10 சிறப்பு பஸ்கள் வீதம் மொத்தம் 30 சிறப்பு பஸ்கள் கோயில் வாசலுக்கு இயக்கப்படுகின்றன.  எனவே திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்கள் சிறப்பு பஸ்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நெல்லை போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* சென்னை-நெல்லைக்கு சிறப்பு ரயில்

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை - செங்கோட்டை இடையே நெல்லை வழியாக சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிறப்பு ரயில் (06089) சென்னையில் இருந்து ஜூலை 6ம் தேதி இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.15 மணிக்கு நெல்லை வந்து சேரும்.

பின்னர் அங்கிருந்து காலை 9.25 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறு மார்க்கத்தில் செங்கோட்டை - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06090) செங்கோட்டையிலிருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு நெல்லை வந்து சேரும். பின்னர் அங்கிருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னை சென்று சேரும். இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.