Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

குமரி மேற்கு கடற்கரையில் 60 நாள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் தொடங்குகிறது

நாகர்கோவில்: மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு ஒன்றிய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைகாலம் 2 பருவ காலமாக உள்ளது. கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்ன முட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதிவரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. விசைப்படகு ஆழ்கடல் பகுதிக்கு சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும். இதற்கு தேவையான உணவு, குடிநீர், ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வர். இந்த வருடம் குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் தடைக்காலம் இன்று (ஜூன் 1ம் தேதி) நள்ளிரவு தொடங்குகிறது.

இந்த மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகினர் தங்கள் படகுகளை பழுது பார்ப்பது வழக்கம். வலைகள், மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்து கொள்கின்றனர். மீன்பிடி தடைக்காலம் துவங்குவதை யொட்டி ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகினர் கரை திரும்பி உள்ளனர். கரை திரும்பிய விசைப்படகுகள் குளச்சல் மீன் பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.