Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கூடங்குளம் 3, 4 அணு உலைகளுக்கு புதிய எரிபொருள் தயாரிப்பு தொடக்கம்: தடங்கலின்றி மின் உற்பத்தி செய்ய முடியும்

நெல்லை: கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 3, 4 அணு உலைகளுக்கு புதிய எரிபொருள் தயாரிக்கும் பணியை ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனம் தொடங்கியது. நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 1, 2 என 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் அணு உலையின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு அக்.22ம் தேதி மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. 2வது அணு உலையின் மூலம் 2016 ஆக.29ம் தேதி மின் உற்பத்தி தொடங்கியது.

இந்த இரண்டு அணு உலைகளும் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து வருகின்றன. இந்த 1, 2 அணு உலைகளில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு அணு உலையை பொறுத்தவரை 163 எரிகோல்கள் பொருத்தப்படும். இதில் மூன்றில் ஒரு பங்கு எரிகோல்கள் ஆண்டுக்கு ஒரு முறை மாற்றப்படும். இதற்காக மின் உற்பத்தி 2 மாதங்களுக்கு மேல் நிறுத்தப்படும். இதனால் எரிபொருள் மாற்றும் காலங்களில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்தது.

இந்த எரிபொருளை இந்தியா - ரஷ்யா கூட்டு ஒப்பந்தத்தின் படி ரஷ்ய நிறுவனமான ரோஸாடாம் கூடங்குளத்திற்கு சப்ளை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த எரிபொருளுக்கு மாற்றாக புதிய எரிபொருளை உற்பத்தி செய்யும் பணியை ரஷ்யாவின் ரோஸாடாம் நிறுவனத்தின் ஒரு அங்கமான ‘டிவிஇஎல்’ நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த புதிய எரிபொருள் கூடங்குளத்தில் தற்போது அமைக்கப்பட்டு வரும் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 3, 4 அணு உலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

3வது அணு உலையை பொறுத்தவரை உட்புற அணு உலை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. நீராவி இன்ஜின்கள், அணு உலை குளிர்விப்பான்கள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 4வது அணு உலையை பொறுத்தவரை உட்புற அணு உலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அணு உலை அழுத்த கலன்கள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. நீராவி ஜெனரேட்டர்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த 3, 4 அணு உலைகளுக்கு ரஷ்யாவின் ரோஸாடாமின் டிவிஇஎல் நிறுவனம் தயாரிக்கும் ‘டிவிஎஸ் - 2எம்’ என்ற புதிய எரிபொருள் சப்ளை செய்யப்பட உள்ளதாக ரோஸாடாம் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய எரிபொருள் மூலம் 18 மாதங்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு எரிகோல்களை மாற்றினால் போதுமானது. இதன் மூலம் மின் உற்பத்தியில் எந்த தடங்கலும் ஏற்படாது. அப்போது கூடுதல் காலங்கள் மின் உற்பத்தி செய்ய முடியும் என நம்பப்படுகிறது.

* செலவு குறையும்

புதிய வகை எரிபொருள் மூலம் எரிபொருள் வாங்கும் செலவு குறைவதோடு மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெறும். மூன்று ஆண்டுகளுக்கு மூன்று முறை இதுவரை எரிபொருள் மாற்றம் நடந்து வந்த நிலையில், இனி மூன்று ஆண்டுகளுக்கு இரண்டு முறை என குறையும். அப்போது ஒரு முறை எரிபொருள் மாற்றும் செலவு மிச்சப்படும். அது மட்டுமல்லாது பயன்படுத்தப்பட்ட எரிபொருளை பாதுகாப்பதற்கான இடவசதியும் மிச்சப்படும்.

* 15 நாடுகளுக்கு சப்ளை

ரோஸாடாமின் டிவிஇஎல் நிறுவனம் 15 நாடுகளில் 70 அணு உலைகளுக்கு எரிபொருள் சப்ளை செய்கிறது. மேலும் 9 நாடுகளுக்கு ஆராய்ச்சிக்கான உலைகளிலும் இந்த நிறுவனத்தின் எரிபொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் இயங்கி வரும் ஒவ்வொரு அணு உலைகளிலும் 6ல் ஒரு அணு உலையில் டிவிஇஎல் நிறுவனத்தின் எரிபொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.