Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கர்நாடக அணைகள் நிரம்பி வழிகிறது காவிரியில் 1,17,000 கனஅடி நீர் திறப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்தது; விரைவில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

மேட்டூர்: கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பி வழிவதால் காவிரியில் 1,17,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 90 அடியாக உயர்ந்தது. அடுத்த சில நாட்களில் 100 அடியை எட்டும் என்பதால் விரைவில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழுமையாக நிரம்பி விட்டன. இதனையடுத்து, அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் முழுவதும் காவிரியில் திறந்து விடப்படுகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, கிருஷ்ணராஜசாகர் அணை முழுவதும் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. இதனால், அந்த அணையில் இருந்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனிடையே, அம்மாநில அரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கனமழை காரணமாக, கேஆர்எஸ் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது நள்ளிரவு அல்லது நாளை(இன்று) காலைக்குள் ஒன்றரை லட்சம் கனஅடி வரை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது’ என தெரிவித்துள்ளது. அதேபோல கபினி அணையில் இருந்து 16,900 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில், காவிரியில் தண்ணீர் வரத்தை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே ஒகேனக்கல்லில் நேற்று மாலை நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி, அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடை நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 60,771 கனஅடியாக வந்த நீர்வரத்து, நேற்று மாலை 28,856 கனஅடியாக சரிந்தது. அதேசமயம் கேஆர்எஸ் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள 1 லட்சம் கனஅடி தண்ணீர், நாளை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் திறப்பை காட்டிலும், வரத்து பலமடங்கு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.

கடந்த 16ம் தேதி காலை 43.83 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று மாலை 4 மணிக்கு 90.01 அடியாக உயர்ந்தது. கடந்த 9 நாட்களில், அணையின் நீர்மட்டம் 46.22 அடி உயர்ந்துள்ளது. கடந்த 2023 ஜூன் 16ம் தேதி, 90.45 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், 391 நாட்களுக்குப் பிறகு நேற்று மாலை 4 மணியளவில் மீண்டும் 90.01 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 52.66 டிஎம்சியாக உள்ளது. கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் இன்னும் ஓரிரு நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டிவிடும் என்றும், விரைவில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.