Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கள்ளக்குறிச்சி சம்பவம்; அதிகாரிகள் யாராக இருந்தாலும் பணிநீக்கம் செய்க: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்துக்கு காரணமான அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். சம்பவத்துக்கு காரணமான அனைவரும் சட்டத்தின் பிடியில் நிறுத்தப்பட வேண்டும். விஷச் சாராயத்துக்கு பயன்படுத்தப்படும் மெத்தனாலை விற்க நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து மூன்று பெண்கள் உட்பட 36 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சை பெற்று வரும் அனைவரும் மிக விரைவாக உடல் நலம் பெற்று இல்லம் திரும்ப இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

தமிழ்நாடு அரசு உயிரிழந்தோரின் குடும்பத்திற்குத் தலா 10 லட்சம் ரூபாயும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணத் தொகை வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணையும் நடத்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விசாரணையில் குறிப்பாக உள்ளூர் காவல்துறையினருக்கும் விஷ சாராயம் காய்ச்சுவோருக்குமிடையிலான தொடர்புகள் துல்லியமாக விசாரிக்கப்பட வேண்டும்.

இதே போல, கடந்த ஆண்டு கள்ளச்சாராயத்தால் பலர் பலியாகினர் என்பதும், ஓராண்டுக்குள் கள்ளக்குறிச்சியில் 35க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்ற செய்தி, மிகுந்த வேதனை கலந்த வருத்தத்தை அளிக்கிறது.

மாவட்ட நிர்வாகம் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்குக் காரணமான காவல் உட்பட அனைத்து நிலை அரசு ஊழியர்கள் அனைவரும் சட்டத்தின் பிடியில் நிறுத்தப்பட வேண்டும்.

சாதாரணப் பணியிட மாற்ற நடவடிக்கை மட்டும் போதாது. இந்தச் சம்பவத்திற்குத் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

விஷச்சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் மெத்தனாலை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.