Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி சந்திப்பு: பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து பேச்சுவார்த்தை

ரியோ டி ஜெனிரோ: இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி-20 அமைப்பின் 19-வது உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடியும் நேற்று பிரேசில் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அதில் 'சமூக உள்ளடக்கம் மற்றும் பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம்' என்ற அமர்வில் பேசிய அவர், 'ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்ற இந்தியாவின் கருப்பொருள், கடந்த ஆண்டைப் போலவே இந்த உச்சிமாநாட்டிலும் வைத்திருப்பது பொருத்தமானது. சர்வதேச மோதல்களால் ஏற்பட்டுள்ள உணவு, எரிபொருள் மற்றும் உர ெநருக்கடி உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. எனவே உலகளாவிய தெற்கின் சவால்கள் மற்றும் முன்னுரிமைகளை நாம் மனதில் கொள்ளும்போது மட்டுமே நமது விவாதங்கள் வெற்றிபெற முடியும். டெல்லி உச்சி மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டது போல, சர்வதேச நிர்வாகம் சார்ந்த நிறுவனங்களை சீர்திருத்துவோம்" என்று பிரதமர் மோடி கூறினார். இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களை அவர் சந்திக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அந்தவகையில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை பிரதமர் மோடி சந்தித்தார்.

பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், "ரியோ டி ஜெனிரோ ஜி 20 மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்ததில் மகிழ்ச்சி. பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உறவுகளை ஆழப்படுத்துவதை மையமாக வைத்து எங்களது பேச்சுக்கள் அமைந்தன. கலாச்சாரம், கல்வி மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்தும் நாங்கள் பேசினோம். இந்தியா-இத்தாலி நட்புறவு ஒரு சிறந்த உலக முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்" என்று அதில் பதிவிட்டிருந்தார்.