ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரான் அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் காட்டி வந்ததால் அந்நாட்டின் மீது கடந்த 13ம் தேதி இஸ்ரேல் விமான படை தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஈரானின் நான்கு அணு சக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. ஈரானின் ராணுவ முகாம்கள் பலத்த சேதமடைந்தன. இந்த தாக்குதலில் அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாக்குதல் சம்பவம் அதிரித்து வரும் நிலையில் இரு நாடுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலால் பல இடங்கள் கடும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகின்றன. இதையடுத்து இரு நாடுகளும் தாக்குதலை தொடரவிருப்பதால் ஈரான் தலைநகா் தெஹ்ரானில் இருந்தும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்தும் மக்கள் வெளியேற வேண்டும் என்று இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.
இந்நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப்பதிவில் , நான் கையெழுத்திடச் சொன்ன 'ஒப்பந்தத்தில்' ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். என்ன ஒரு அவமானம், மனித உயிரை வீணடிப்பது. எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்க முடியாது. நான் அதை மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டேன். அனைவரும் உடனடியாக தெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும் என்று அதில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
தெஹ்ரானில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு அறிவுரை:
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. தெஹ்ரானில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
