சென்னை: தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாருங்கள் என்று முதலீட்டாளர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையில் சார்பில் சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாட்டின் புத்தமை அறிவுசார் சொத்துரிமை முதலாவது மாநாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில், தமிழ்நாட்டை சேர்ந்த 16 ஆராய்ச்சியாளர்களின் காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்புகள் அடங்கிய அரங்குகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு, ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: டிஜிட்டல் சகாப்தத்தில் தமிழகத்தின் பயணத்திற்கு அடித்தளமிட்டது கலைஞரின் தொலைநோக்கு தலைமைதான். அவர்தான் ஒரு துணிச்சலான மற்றும் முற்போக்கான நடவடிக்கையாக அர்ப்பணிப்புடன் கூடிய மாநில தகவல் தொழில்நுட்ப கொள்கையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் முதல்வர். பள்ளிகளில் கணினி கல்வியை கொண்டு வந்தார். டைடல் பூங்காக்களை அமைத்தார். இதன்மூலம் தமிழ்நாட்டில மில்லியன் கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்து, அவர்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்துள்ளார்.
கலைஞரின் அடிச்சுவடுகளை பின்பற்றி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி மாநிலமாக மாற்றியுள்ளார். அது, தற்போது தமிழகத்தில் மாற்றத்திற்கான பாதையை உருவாக்கி வருகிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் அதிகளவில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகிறது. மென்பொருள் ஏற்றுமதியில் இந்திய அளவில் 3வது மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் தமிழக மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதித்து வருகின்றனர். இந்த மாநாடு மூலம் தமிழ்நாடு அரசுக்கும் முன்னணி தொழில்கள், உலகளாவிய மையங்கள் மற்றும் முதன்மையான கல்வி நிறுவனங்களுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
இந்த கூட்டாண்மைகள் வலுவான தொடர்புகளையும், துடிப்பான கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பையும் உருவாக்க உதவும். இது கூட்டு உருவாக்கம், நிதி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும். தமிழ்நாட்டில் முதலீட்டிற்கான ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எளிதாக வணிகம் செய்வதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக பல அறிக்கைகள் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உங்களை அழைக்கிறேன். நாம் ஒன்றாக முன்னேறுவோம். இவ்வாறு அவர் பேசினார். இதில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநில திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளர் பிரஜேந்திர நவ்னித் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

