துபாய்: பிரபல இந்திய கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா நேற்று நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது, சர்வதேச கிரிக்கெட்டில் 10,756 ரன்கள் என்ற சாதனையை எட்டினார்.
இதன் மூலம், மகளிர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகளின் பட்டியலில் நியூசிலாந்தின் சூசி பேட்ஸை (Suzie Bates) முந்தி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். தாய்லாந்துக்கு எதிரான போட்டியின் போது மந்தனா 19 ரன்கள் எடுத்த நிலையில், சூசி பேட்ஸின் (10,740 ரன்கள்) சாதனையை முறியடித்தார்.
மகளிர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகளின் பட்டியலில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் 10,868 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். மிதாலி ராஜின் உலக சாதனையை சமன் செய்ய மந்தனாவுக்கு இன்னும் 112 ரன்கள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.



