Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து பாக். புகார் 20 ஆயிரம் இந்தியர்கள் தீவிரவாதத்திற்கு பலி: ஐநா கூட்டத்தில் இந்திய தூதர் பதிலடி

நியூயார்க்: பாக். தீவிரவாதத்தால் கடந்த 40 ஆண்டுகளில் 20 ஆயிரம் இந்தியர்கள் பலியாகி இருப்பதாக ஐநா கூட்டத்தில் இந்திய தூதர் தெரிவித்தார். ஆயுத மோதலில் தண்ணீரை பாதுகாத்தல்-பொதுமக்களின் உயிர்களை பாதுகாத்தல் என்ற தலைப்பில் ஸ்லோவேனியாவின் நிரந்தர மிஷன் ஏற்பாடு செய்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியும் தூதருமான பர்வதநேனி ஹரீஷ் பேசியதாவது,

‘‘சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் தூதுக்குழுவால் மேற்கொள்ளப்படும் தவறான தகவல்களுக்கு பதிலளிப்பதற்கு நாங்கள் கட்டயாப்படுத்தப்படுகிறோம். ஒரு மேல் நதிக்கரை நாடாக இந்தியா எப்போதும் பொறுப்பான முறையில் தான் செயல்பட்டு வருகின்றது. 65 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் நல்லெண்ணத்துடன் நுழைந்தது. ஒப்பந்தத்தின் முன்னுரையில் அது நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் உணர்வில் முடிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆறரை தசாப்தங்களாக இந்தியா மீது பாகிஸ்தான் மூன்று போர்களையும், ஆயிரக்கணக்கான தீவிரவாத தாக்குதல்களையும் நடத்தியதன் மூலமாக ஒப்பந்தத்தின் உணர்வை பாகிஸ்தான் மீறியுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் தீவிரவாத தாக்குதல்களில் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய உயிர்கள் பலியாகி உள்ளன. அவற்றில் மிக சமீபத்தியது பஹல்காம் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தீவிரவாத தாக்குதலாகும். இந்த காலகட்டங்களில் இந்தியா அசாதாரண பொறுமையையும் பெருந்தன்மையையும் காட்டியிருந்தாலும், பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன் இந்தியாவில் எல்லைத்தாண்டிய தீவிரவாதம், பொதுமக்களின் உயிர்கள், மதநல்லிணக்கம் மற்றும் பொருளாதார செழிப்பை பணயக் கைதிகளாக வைத்திருப்பதற்கு முயல்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் ஒப்பந்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விவாதிக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கேட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து இவற்றை நிராகரித்து வருகின்றது. பாகிஸ்தானின் வேண்டுமென்றே தடை செய்யும் அணுகுமுறையானது இந்தியா தனது சட்டப்பூர்வமான உரிமைகளை முழுமையாக பயன்படுத்துவதை தொடர்ந்து தடுக்கிறது. செயல்பாடுகள் மற்றும் நீர் பயன்பாட்டின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்கான அணை உள்கட்டமைப்பிற்கான தொழில்நுட்பம் மாறியுள்ளது. சில பழைய அணைகள் கடுமையான பாதுகாப்பு கவலைகளை எதிர்கொள்கின்றன. ஆனால் பாகிஸ்தான் இந்த உள்கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஒப்பந்தத்தின் கீழ் அனுமதிக்கப்படும் விதிகளில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து தடுத்து வருகின்றது.

பாகிஸ்தானின் இந்த இழிவான செயல்கள் எங்கள் திட்டங்களின் பாதுகாப்புக்கும் பொதுமக்களின் உயிருக்கும் தொடர்ந்து ஆபத்தை விளைவிக்கின்றன. இவற்றை கருத்தில் கொண்டு தான் உலகளாவிய தீவிரவாத மையமாக இருக்கும் பாகிஸ்தான் எல்லைத் தாண்டிய தீவிரவாதத்திற்கான அதன் ஆதரவை நம்பகத்தன்மையுடன் மாற்ற முடியாத வகையில் முடிவுக்கு கொண்டு வரும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும்” என்றார்.