Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ஹைட்ரஜன் ரயிலை இயக்க இந்திய ரயில்வே புதிய இலக்கு..!

டெல்லி: இந்திய ரயில்வே தனது ஹைட்ரஜன் ரயில்களின் இயக்க வேகத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, ஹைட்ரஜன் ரயிலை மணிக்கு 110 கி.மீ வரையிலான வேகத்தில் இயக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ரயில்வே வாரியத் தலைவர் சதீஷ் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

ஹரியானாவின் ஜிந்த்-சோனிபட் (Jind–Sonipat) இடையேயான 89 கி.மீ பாதையில், முதல் ஹைட்ரஜன் ரயில் தற்போது அதிகபட்சமாக மணிக்கு 75 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை மணிக்கு 120 கி.மீ வேகம் வரை இயக்கி நடத்தப்பட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன.

எனவே பாதுகாப்பை உறுதிசெய்து, இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ஹைட்ரஜன் ரயில்களின் இயக்க வேகத்தை மணிக்கு 110 கி.மீ ஆக உயர்த்த தேவையான எரிபொருள் விநியோகம் மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகளை செய்து வருவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். இதனிடையே நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில், கவுகாத்தியில் உள்ள ஹவுரா–கமாக்யா வழித்தடத்தில் ஏற்கனவே இயக்கப்பட்டு வருவதாக சதீஷ் தெரிவித்தார்.

மேலும் நான்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவை விரைவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த ஆண்டில் ரயில்வே துறைக்கு மேலும் 11 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக ஜிந்த்-சோனிபட் இடையிலான 89 கி.மீ வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் ரயிலை கடந்த ஜூலை 17 அன்று பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.