Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ, லஷ்கர் உதவியுடன் பஹல்காமில் தீவிரவாதிகள் ஊடுருவியது எப்படி?.. தேசிய புலனாய்வு முகமை அறிக்கையில் பகீர்

புதுடெல்லி: பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உத்தரவின் பேரில், லஷ்கர் -இ-தொய்பா உருவாக்கியுள்ளது என தேசிய புலனாய்வு முகமை தனது முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) காஷ்மீரின் குப்வாரா, புல்வாமா, சோபூர், அனந்நாக், பாரமுல்லா ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தி 2,800 பேரிடம் விசாரணை நடத்தியது. இதுவரை 150 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பஹல்காமில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்டறிய சிசிடிவி வீடியோ பதிவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், உள்ளூர் வியாபாரிகள், குதிரை சவாரி ஊழியர்கள் என ஏராளமானோர் சாட்சியம் அளித்துள்ளனர். பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் 3 செயற்கைகோள் போன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் சிக்னல்கள் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் என்ஐஏ தாக்கல் செய்துள்ள முதல்கட்ட விசாரணை அறிக்கையில், ‘காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம் சோனா மார்க் என்ற இடத்தில் சுரங்க பாதை கட்டுமானத்தில் ஈடுபட்ட 6 தொழிலாளர்கள் மற்றும் ஒரு மருத்துவர் கடந்தாண்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலும் பஹல்காம் தீவிரவாத தாக்குதலும் ஒரே மாதிரியாக உள்ளது. இதனால் இரு தாக்குதலையும் லஷ்கர்-இ-தொய்பா ஆதரவு பிரிவு நடத்தியுள்ளதாக தெரிகிறது.

பஹல்காம் பகுதிக்கு தீவிரவாதிகள் கடந்த மாதம் 15ம் தேதி வந்துள்ளனர். பைசரன் பள்ளத்தாக்கு, அரு பள்ளத்தாக்கு, பெதாப் பள்ளத்தாக்கு, உள்ளூர் பூங்கா ஆகியவற்றை கண்காணித்து பாதுகாப்பு படையினர் இல்லாத பைசரன் பள்ளத்தாக்கு பகுதியை தேர்வு செய்துள்ளனர். இங்கு காஷ்மீரைச் சேர்ந்த 4 பேர் உதவியுடன், பைசரன் சுற்றுலா பயணிகளை 2 நாட்களாக கண்காணித்து இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஹஸிம் முசா என்ற சுலைமான், அலி பாய் என்ற தல்கா பாய் ஆகியோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். ஹஸிம் முசா, கந்தர்பால் மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதலிலும் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது. இவர்கள் பாகிஸ்தானில் உள்ள நபர்களிடம் தொடர்பில் இருந்து உத்தரவுகளை பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு தேவையான இருப்பிடம், உணவு மற்றும் உளவு தகவல்களை காஷ்மீரில் உள்ள ஜமாத்-இ-இஸ்லாமி, ஹரியத் மாநாடு பிரிவைச் சேர்ந்தவர்கள் வழங்கியுள்ளனர். தாக்குதல் திட்டம் பாகிஸ்தானின் உளவு பிரிவான ஐஎஸ்ஐ அதிகாரிகளின் உத்தரவின் பேரில், பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் தலைமையகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது’ என்று அந்த விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.