Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வனத்துறை இடத்தை மீட்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு மறியல்; 50 பேர் கைது: கும்மிடிப்பூண்டி அருகே பதற்றம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியில் மேல்பாக்கம், குமரன்நாயக்கன்பேட்டை, சித்தூர் நத்தம், கோங்கல்மேடு உள்ளிட்ட 5 கிராமங்களில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், மேல்பாக்கம் பகுதியில் 90 வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். மேல்பாக்கம் கிராமத்தை சுற்றிலும் வனத்துறைக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வளர்ந்துள்ள தேக்கு, தைல மரம் உள்ளிட்ட மரங்களை வனத்துறை பராமரித்து வருகிறது. இந்நிலையில் 30 வருடங்களுக்கு முன்பு வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் 65 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக சில ஆண்டுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வனத்துறைக்கு சொந்தமான இடத்தை மீட்டு அந்த இடத்தில் மரங்கள் வளர்க்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி வட்டாட்சியர் அறிவுறுத்தல்படி 65 வீடுகளுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை வீடுகள் அகற்றப்படவில்லை.

இதனால் மேற்கண்ட நபர் மேலும் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு 65 வீடுகளையும் காலி செய்யவேண்டும், இல்லை என்றால் பொக்லைன் இயந்திரம் மூலம் வீடுகள் இடிக்கப்படும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாய சங்க மாவட்ட செயலாளர் துளசி நாராயணன் ஆகியோர் மாற்று இடம் வழங்கிவிட்டு வீடுகளை இடிக்கும்படி கோரிக்கை வைத்தனர். இதற்கு தாசில்தார் சரவணகுமாரி, உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவ அதிகாரி, வனத்துறை, தீயணைப்புத்துறை ஆகிய அனைத்து அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு கோரி கடிதம் கொடுத்துள்ளார்.

அதன்படி அனைத்து துறை அதிகாரிகளும் இன்று காலை 5 பொக்லைன் இயந்திரங்கள், நான்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் வந்து சம்பந்தப்பட்ட வீடுகளை இடிக்க முற்பட்டனர். இதையறிந்த ஊர் பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர், கோட்டாட்சியர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘நாங்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். வழக்கு நிலுவையில் உள்ளது. வீடு கட்டி காலம் காலமாக வாழ்ந்து வருகிறோம்.

வீடுகளை இடித்தால் எங்கு செல்வோம்’ என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை ஏற்காத அதிகாரிகள் 3 மணி நேரம் காலக்கெடு கொடுத்தனர். இதனிடைேய, பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் 50 பேரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர். இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புக்காக 150க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.