Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கட்டாய திருமணத்தால் நேர்ந்த கொடுமை; முதலிரவில் கணவனை 35 துண்டுகளாக வெட்டுவதாக கத்தியுடன் மிரட்டிய புதுப்பெண்: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்

பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசத்தில் கட்டாய திருமணத்தால் முதலிரவில் தனது கணவனை 35 துண்டுகளாக வெட்டுவதாக கத்தியுடன் மிரட்டிய புதுப்பெண் தற்போது கணவர் வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பியோடிவிட்டார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் ஏடிஏ காலனி பகுதியைச் சேர்ந்த கேப்டன் நிஷாத் (26) என்பவருக்கும், கர்ச்சனா தீஹா கிராமத்தைச் சேர்ந்த சிதாராவுக்கும் கடந்த ஏப்ரல் 29 அன்று திருமணம் நடைபெற்றது. ஏப்ரல் 30 அன்று மணமகள் புகுந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

மே 2 அன்று பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உறவினர்களும் நண்பர்களும் மகிழ்ச்சியாக விழாவைக் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், மணமக்கள் அறைக்குள் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறிக்கொண்டிருந்தது. முதலிரவுக்காக அறைக்குள் நுழைந்த கேப்டன் நிஷாத்தை, முக்காடு அணிந்து மூலையில் அமர்ந்திருந்த சிதாரா கூர்மையான கத்தியுடன் வரவேற்றார். அப்போது அவர் கூறுகையில், ‘என்னைத் தொடாதே... நான் அமனுக்கு (காதலன்) சொந்தமானவள். கட்டாயத்தின் பேரில்தான் உன்னை திருமணம் செய்துகொண்டேன். முதலிரவைக் கொண்டாட அமனுக்கு மட்டுமே உரிமை உண்டு. நான் அவருடன் தான் வாழ விரும்புகிறேன். என்னை தொட்டால் உன்னை 35 துண்டுகளாக வெட்டிவிடுவேன்’ என்று அவர் மிரட்டியுள்ளார். புது மனைவியின் இந்த கொடூரமான வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன நிஷாத், அந்த இரவு முழுவதும் சோபாவிலேயே அமர்ந்து பொழுதைக் கழித்துள்ளார்.

இந்த திகில் சம்பவம் தொடர்ந்து மூன்று இரவுகள் நடந்தது. மன உளைச்சலைத் தாங்க முடியாத நிஷாத், மூன்று இரவுகளாக நடந்ததை பெற்றோரிடம் கூற, வீட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து சிதாராவிடம் விசாரித்தபோது, அவர் தயக்கமின்றி, ‘நான் அமனைக் காதலிக்கிறேன்; கட்டாயத்தால்தான் நிஷாத்தை திருமணம் செய்துகொண்டேன்’ என்று உண்மையைக் கூறினார். இதையடுத்து, இரு குடும்பத்தினருக்கும் இடையே பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சிதாரா தனது கணவருடன் வாழ்வதாக எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டார். ஆனால், தனிமையில் கணவரை தொடர்ந்து சிதாரா துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மே 30 அன்று, வீட்டின் பிரதான கேட் பூட்டப்பட்டிருந்ததால், பின்பக்கச் சுவரேறி குதித்து நள்ளிரவில் சிதாரா தப்பிச் சென்றுள்ளார். அவர் தப்பிச் சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மணமகன் நிஷாத்தின் குடும்பத்தினர் கூறுகையில், ‘அமன் என்பவன் எங்களது மகனைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாக சிதாரா செல்போன் உரையாடல்களைக் காட்டினார். நாங்கள் பெரும் பயத்தில் வாழ்ந்தோம். அவள் ஓடிப்போனது நல்லதுதான்; அவளும் பாதுகாப்பாக இருக்கிறார், என் மகனும் பாதுகாப்பாக இருக்கிறான்’ என்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘குடும்பப் பிரச்னை என்பதால், இரு குடும்பத்தினரும் பேசித் தீர்த்துக் கொள்வதாக எழுத்துப்பூர்வமாக அளித்ததால், வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை’ என்று தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தால் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிஷாத், ‘முதலிரவில் ஏற்பட்ட அந்தப் பயம் இன்னும் என்னை விட்டுப் போகவில்லை’ என்று வேதனையுடன் கூறியுள்ளார். இருந்தாலும் இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.