Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பருவமழை காலத்தில் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்தில் சென்னையில் வெள்ள தடுப்பு பணி: அதிகாரிகளுக்கு பயிற்சி

சென்னை : பருவமழை காலத்தில் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்தில் சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக, அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகரில் 2,624 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்களையும், 53 கிலோ மீட்டர் நீளத்திற்கு 33 நீர்வழி கால்வாய்களையும் சென்னை மாநகராட்சி பராமரித்து வருகிறது. இந்த மழைநீர் கட்டமைப்பு மற்றும் கால்வாய்களின் வழியாக சென்னையில் ஓடும் 4 நீர்வழித்தடங்களான பக்கிங்காம் கால்வாய், அடையாறு ஆறு, கூவம் ஆறு மற்றும் கொசஸ்தலை ஆறு மூலமாக மழைநீர் கடலில் கலக்கிறது.

சென்னையில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி அந்தந்த மண்டலங்களினால் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இப்பணி சுழற்சிமுறையில் ஆண்டிற்கு 2 முறை செயலாக்கப்பட்டு வருகிறது. இப்பணி, துறையின் தூர்வாரும் பணியாளர்கள் மூலம் அல்லது ஒப்பந்ததாரர்களின் பணியாட்களின் மூலம், வருடம் முழுவதும், வார கால அட்டவணை பட்டியலிடப்பட்டு அதன்படி, செயலாக்கப்படுகிறது. இதில் அகற்றப்படும் தூர், உடனடியாக துறை வாகனங்களின் மூலமாக இதற்கென குறித்த இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கொட்டப்படுகின்றன. மழைநீர் உட்செல்ல உள்ள வழிகள் மற்றும் குழாய்கள் அவ்வப்போது சுத்தம் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் நோக்கில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகள், மழைநீர் வடிகால்களை தூர்வாருதல், ஆகாயத்தாமரையை அகற்றுதல் போன்ற பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இதற்காக, சென்னையின் 15 மண்டலங்களுக்கும் தலா ₹50 லட்சம் வீதம் மொத்தம் ₹7.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நவீன இயந்திரங்கள் மூலம், ஓட்டேரி, விருகம்பாக்கம், மாம்பலம் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், அடையாறு, கூவம் ஆறுகளில் ஆகாயத்தாமரையை அகற்றி தூர்வாரும் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் நடைபெற உள்ளது.முதற்கட்டமாக ஜூன் 30ம் தேதிக்குள் இந்த பணிகள் முடிக்கப்படும், தென்மேற்கு பருவ மழைக்கு பிறகு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக மீண்டும் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு, அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்படும்.

4000 சாலை பணியாளர்கள் மூலம் இந்த மழைநீர் வடிகாலை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஜப்பான் நாட்டுடன் இணைந்து சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அடுத்த மாதம் தமிழகம் மற்றும் ஜப்பான் உயர் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் கடந்த 2015 மற்றும் 2023ம் ஆண்டு கனமழை கொட்டியதால் சென்னை மாநகரில் பெருமளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்நிலையில், வருங்காலத்தில் சென்னை மாநகரை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஜப்பான் சர்வதேச கூட்டுறவுமுகமை உதவியுடன் சென்னையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற கூட்டத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், நீர்வளத்துறை, மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதிக மக்கள் தொகை கொண்டபெருநகரங்களில் ஒன்றான டோக்கியோவில் செயல்படுத்தப்படும் வெள்ள தடுப்பு திட்டங்கள், சென்னை போன்ற பெரு நகரங்களுக்கும் பொருந்தும் என்பதால், அங்குள்ள திட்டங்களை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கெனவே பார்வையிட்டனர். இதையடுத்து, முதற்கட்டமாக கடந்த ஆண்டு மே மாதம் ஜப்பானில் இத்திட்டம் தொடர்பான பயிற்சிக்காக தமிழக அதிகாரிகள் சென்றனர்.

இந்நிலையில், சென்னையில் அடுத்த மாதம் (ஜூன்) ஜப்பான் மற்றும் தமிழக உயர் அதிகாரிகள் இத்திட்டம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர். பின்னர் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வெள்ள தடுப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றனர்.

நிலத்தடி சுரங்கங்கள்

சென்னையில் கனமழை காலங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்வதை தடுக்கும் வகையில், நிலத்தடி சுரங்கங்கள், சைபோன் குழாய்கள், நீர் படுகைகளை விரிவுபடுத்தி ஒரு நீர்நிலையிலிருந்து மற்றொரு நீர்நிலைக்கு அனுப்புதல் உள்ளிட்ட சில ஜப்பான் நாட்டு தொழில்நுட்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சென்னையின் நிலப்பரப்புக்கு ஏற்ப, விரிவான ஆய்வுக்குப் பிறகு இத்திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.