Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலில் சூறைக்காற்று; டெல்டாவில் 3வது நாளாக 41 ஆயிரம் மீனவர்கள் முடக்கம்: 3,600 படகுகள் கரை நிறுத்தம்

தரங்கம்பாடி: கடலில் சூறைக்காற்று வீசுவதால் நாகை, மயிலாடுதுறை, புதுகை மீனவர்கள் 3வது நாளாக இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் 3600 படகுகள் கரை நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீச கூடும். இதனால் நாட்டுப் படகு மீனவர்கள் வரும் 29ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடலில் சூறை காற்று வீசுவதால் நாட்டுப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் இன்று கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இதனால் தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், சந்திரபாடி, சின்னூர்பேட்டை, பெருமாள்பேட்டை, வெள்ளகோவில், புதுப்பேட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 1000 மீனவர்கள் இன்று 3வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 400 பைபர் மற்றும் நாட்டுப்படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் பழையாறு, கூழையாறு பகுதியில் இருந்து 30 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் உள்ளனர். நாகை மாவட்டம் வேதாரணயம், கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இன்று 3ம் நாளாக 5000 மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர்.

தடைகாலத்தால் விசைப்படகு செல்லாத நிலையில் 1000 பைபர் படகும், மீன்பிடிக்க செல்லாததால் மீன் வரத்து அடியோடு நின்று விட்டது. இதனால் கடற்கரை மற்றும் மீன் மார்க்கெட் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1884 நாட்டுப்படகுகள் 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் 5000 மீனவர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3600 பைபர் மற்றும் நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லாததால் 41,000 மீனவர்கள் 3 நாட்களாக முடங்கி கிடக்கின்றனர். அதேசமயம் தஞ்சை மாவட்ட நாட்டுபடகுகள் 2 நாட்களுக்கு பின் இன்று கடலுக்கு சென்றுள்ளன.