Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பி-52 நவீன போர் விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்பியது அமெரிக்கா: மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிப்பு

கெய்ரோ: அமெரிக்கா அனுப்பிய பி-52 அதி நவீன போர் விமானங்கள் இஸ்ரேலுக்கு வந்துள்ளன. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேலில் புகுந்து தாக்குதல் நடத்தி 1,200 பேரை கொன்றனர்.250 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். அதற்கு பழிவாங்க காசா மீது இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. ஒரு ஆண்டுக்கும் மேலாக காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 43,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் காசாவை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.

காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா,ஏமனில் ஹவுதி போராளிகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 1ம் தேதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 200 ஏவுகணைகளை வீசியது. இதற்கு பதிலடியாக கடந்த 26ம் தேதி இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரானின் ராணுவ தளங்கள் மீது குண்டுகளை வீசின. ஈரானின் ஆயுத கிடங்குகள், ஆயுத உற்பத்தி ஆலைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஈரானை அதிர்ச்சியடைய செய்தது.

ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கூறுகையில், காசா, லெபனானில் இஸ்ரேல் நடத்திய தீவிர தாக்குதலில் இதுவரை 50,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று மிரட்டல் விடுத்தார்.இதன் பின்னர் இஸ்ரேலின் மத்திய பகுதியில் உள்ள டிரா நகரில் ஹிஸ்புல்லா படையினர் நேற்று முன்தினம் ஏவுகணைகளை வீசியதில் 17 பேர் படுகாயமடைந்தனர். வடக்கு லெபனானில் உள்ள கிராமங்களில் நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய வான் வழி தாக்குதலில் 52 பேர் பலியாகினர்.

இந்த நிலையில் காசா மீது தரைவழி,வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. வடக்கு காசாவில் ஷேக் ரட்வான் மருத்துவமனையில் நேற்று முன்தினம் போலியோ முகாம் நடந்தது. அப்போது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். ஆனால் அந்த நேரத்தில் தங்கள் ராணுவம் அந்த பகுதியில் தாக்குதலை நடத்தவில்லை என்று இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது. காசாவில் உள்ள பெய்ட் லஹியா,ஜபாலியா நகரில் நேற்று இஸ்ரேல் படைகள் குண்டுவீசியதில் 23 பேர் கொல்லப்பட்டனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இஸ்ரேலுக்கு எதிராக பதிலடி கொடுப்போம் என ஈரான் உச்ச தலைவர் மிரட்டல் விடுத்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது. அவ்வாறு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்ததாக இஸ்ரேல் பத்திரிகை டைம்ஸ் ஆப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்கா அனுப்பிய பி-52 என்ற அதி நவீன போர் விமானங்கள் மத்திய கிழக்கிற்கு வந்துள்ளன. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

* கடைசி அஸ்திரம்

போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த விமானங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க விமான படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது 32,000 கிலோ எடை வரை ஆயுதங்களை சுமந்து செல்லும். ஒரு முறை எரிபொருள் நிரப்பினால்14,200 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த வகை அதி நவீன போர் விமானங்களை கடைசி அஸ்திரமாக தான் அமெரிக்கா பயன்படுத்தும்.