Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம்: டெல்டா மாவட்டங்களிலும் போராட்டம் தீவிரம்

தஞ்சை: விவசாயத்துக்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை கைவிடக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்டா மாவட்டங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தியதன் காரணமாக அந்த சட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு வாபஸ் பெற்றது. தற்போது குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மேலும் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வது, வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது, 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது, போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவது, உலக வர்த்தக அமைப்பின் நிர்ப்பந்தங்களில் இருந்து வெளியேறுவது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் இந்த கோரிக்கைகளுக்கே தீர்வு காண முடியாத நிலையில் இப்போது விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் 2025-2026ம் நிதியாண்டில் பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாயி யோஜனா திட்டத்தில் நவீன நீர்பாசன மேலாண்மை மற்றும் நீர்மேலாண்மை நவீன மயமாக்கலுக்காக ரூ.1600 கோடி ஆரம்ப கட்ட நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாசனத்திற்கு நீர் வழங்கும் திட்டத்தை நவீனமயமாக்கி, ஏற்கனவே உள்ள கால்வாய்கள் அல்லது பிற ஆதாரங்களில் இருந்து வழங்கப்படும் பாசன நீரை ஒரு நவீன திட்டத்தில் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த முடிவு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், விவசாயிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர். நாகை கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. மாவட்ட தலைவர் சரபோஜி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் திரளான விவசாயிகள் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமையில் போராட்டம் நடந்தது. திருவாரூர் ரயில் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்ட் சார்புடைய தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. மாநில பொது செயலாளர் மாசிலாமணி தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஜோசப் மற்றும் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். இதேபோல் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதேபோல் மாவட்ட தலைநகரங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.