காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல தாதா தரின் கூட்டாளி பொய்யாகுளம் தியாகுவை போலீசார் கைது செய்தனர். இவர் மீது 80 குற்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் நகரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி தர், கடந்த 2017ம் ஆண்டு கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், அவரது இடத்தை பிடிப்பதற்காக காஞ்சிபுரத்தில் ரவுடிகளிடையே போட்டி நிலவி வருகிறது. இவர்களில் பொய்யாகுளம் பகுதியை சேர்ந்த தியாகு, காஞ்சிபுரம் நகரத்தில் பட்டு ஜவுளி வியாபாரிகள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என எல்லோரையும் மிரட்டி பணம் பறித்து வந்தார்.பாதிக்கப்பட்டவர்களில் ஒருசிலர் மட்டுமே புகார் கொடுத்ததால், தியாகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் கைது செய்வதும் அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக இருந்து வந்ததும் தியாகுவுக்கு வாடிக்கையாக இருந்து வந்தது. தியாகு மீது 8 கொலை வழக்குகள், 11 கொலை முயற்சி வழக்குகள் என 51 வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு காஞ்சிபுரம் நகரத்தில் கொலைகளை தடுப்பதற்காக சிறப்பு தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக இருந்த தியாகுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த தியாகு, தலைமறைவாக இருந்துகொண்டு அடியாட்கள் மூலம் காஞ்சிபுரத்தில் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் மாமூல் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த ரவுடி தியாகுவை நேற்று போலீசார் கைது செய்ய முயன்றபோது தப்பி ஓடினார்.
அப்போது, கீழே விழுந்ததில் அவரது கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை கைது செய்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கை மற்றும் காலில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. அவரிடம் விசாரித்தபோது 80 குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
