Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

18 ஆயிரம் அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் பேஸ் கேம்ப் அடைந்து தமிழ்நாட்டு சிறுமி சாதனை: சென்னை ஐடி ஊழியரின் மகள்

நெல்லை: நெல்லையைச் சேர்ந்த 6 வயது சிறுமி லலித் ரேணு, உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரமான 18 ஆயிரம் அடி உயர பேஸ் கேம்பை அடைந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்த முதல் தமிழ்நாட்டு சிறுமி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து இதுவரை 8 வயதுக்குட்பட்ட எந்த குழந்தையும் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் சென்றதில்லை. இந்நிலையில், நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்த லலித் ரேணு (6), முதன்முறையாக இந்த சாதனையை நிகழ்த்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். லலித்ரேணு தாழையூத்தில் உள்ள தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார்.

லலித் ரேணுவுக்கு மலையேற்றம் என்பது, அவரது குடும்பத்தில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்ட பழக்கமாக அறிமுகமாகி உள்ளது. அவரது தந்தை தர் வெங்கடேஷ், சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சிறுவயது முதலே மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட தரும், அவரது மனைவி அபர்ணாவும், லலித் ரேணுவையும் மலைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன் விளைவாக, இரண்டரை வயதில் வெள்ளியங்கிரி மலையில் ஏறத் தொடங்கிய லலித் ரேணு, தற்போது எவரெஸ்ட் பேஸ் கேம்ப் வரை சென்று வந்துள்ளார். சிறுமி லலித் ரேணு இதுவரை சபரிமலை, வெள்ளியங்கிரி மலை, பருவதமலை, ராமர் மலை, தோரணமலை, சதுரகிரி மலை, பத்ரிநாத், நம்பிக்கோயில் மலை, செண்பகாதேவி அருவி, ஹரிஹர் போர்ட், கேதார்நாத் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலைகளில் ஏறி இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் 18 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைவது சாதாரண காரியமல்ல. 130 கிமீ தூரம் கொண்ட இந்த மலையேற்ற பயணத்தை லலித் ரேணு 13 நாட்களில் நிறைவு செய்துள்ளார். இதில் 8 முதல் 9 நாட்கள் ஏறுவதற்கும், 4 நாட்கள் இறங்குவதற்கும் எடுத்துக் கொண்டார். தனது 6வது வயதில் இந்த கடினமான இலக்கை எட்டிய சிறுமி லலித் ரேணுவின் இந்த சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.