Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாளவாடி அருகே தென்னந்தோப்பிற்குள் புகுந்து யானை அட்டகாசம்: விவசாயிகள் பீதி

சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் காட்டு யானை தோப்புக்குள் புகுந்து தென்னை மரத்தை வேருடன் சாய்த்து அட்டகாசம் செய்வதால், விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை அப்பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் நுழைந்து அங்கு பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த கம்பி வேலியை சேதப்படுத்திவிட்டு தென்னந்தோப்பில் உள்ள 2 தென்னை மரங்களை வேருடன் சாய்த்தது.

யானை நடமாட்டத்தை கண்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து சத்தம் போட்டு காட்டு யானையை ஒரு மணி நேரம் போராடி வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் தடுக்க வனத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தாளவாடி மலை பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை தாளவாடி அருகே உள்ள அருள்வாடி கிராமத்தில் 2 காட்டு யானைகள் விவசாய தோட்டப்பகுதிகளில் நடமாடின. இதுகுறித்து உடனடியாக அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.