Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டியால் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி

சேலம்: மாப்பிள்ளை இவர் தான், ஆனால் அவரது போட்டிருக்கும் சட்டை எங்களோடது’ என்பது போல, அதிமுகவில் இருந்து ஒருவர் முதல்வராக வருவார் என ஒன்றிய உள்துறை அமைச்சர் கூறியது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி, தனித்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலிலாவது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டிய பாஜக., பல்வேறு வழக்குகளை வைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிரட்டி கூட்டணியில் சேர்த்துள்ளது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேரடியாக வந்து தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும் முன்பாகவே கூட்டணியை ஏற்படுத்தினார். குறிப்பாக மத்தியில் ஆட்சி செய்துவரும் பாஜக., அனைத்து மாநிலங்களிலும் நுழைந்து விட்டது. இதனால் ஒன்றிய அரசை எதிர்த்து பேசக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் திமுக மட்டுமே தமிழகத்திற்காகவும், உரிமைக்காகவும் போராடி வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பாஜக, தமிழ்நாட்டிலும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது: எப்படியாவது தமிழகத்தில் கால் ஊன்றிவிட வேண்டும் என்பது தான் பாஜக முக்கிய நோக்கமாகும்.

அதிமுக மீது ஏறி ஆட்சியை பிடிப்பதுடன், அக்கட்சியை விழுங்கிவிட திட்டமிட்டு செயல்படுகிறது. அதிமுக மாஜி அமைச்சர்களும் தங்கள் மீது இருக்கும் வழக்குகளில் இருந்து தப்பிக்கும் வகையில் வேறு வழியின்றி பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என பாஜக கூறியதால் எடப்பாடி பழனிசாமி மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். இதற்கிடையில் அவரது மகிழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சரான அமித்ஷா, மண்ணை அள்ளிப்போட்டுவிட்டார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என கூறியுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி தன் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பொருத்தவரையில் பாஜகவை நம்பி அவர்களுடன் சேர்ந்து, நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டார். ஆரம்பம் முதலே அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அவரை கைவிடமாட்டோம் என பாஜக கூறியது. எனவே எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்தித்துவிட்டு, கடைசி நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்க திட்டமிட்டுள்ளனரோ? என்ற சந்தேகமும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது: பாஜகவை பொறுத்தவரையில் அதிமுக மீது ஏறி சவாரி செய்ய முடிவு செய்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் நாங்கள் பிரிந்து கிடப்பது தான்.

அதே நேரத்தில் எங்களின் பிடி அவர்களிடம் இருக்கிறது. இதனால் அவர்கள் சொல்படி நாங்கள் நடக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் திமுக செய்துள்ள நலத்திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தேர்தலில் திமுகவை ஜெயிப்பது என்பது லேசான காரியம் அல்ல. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஆசையை காட்டி தங்களின் வலையில் வீழ்த்தியுள்ளனர். மாப்பிள்ளை இவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை எங்களுடையது என கூறி அதிமுகவை மூழ்கடிக்கும் வேலையை தொடங்கியுள்ளனர். அதன்வெளிப்பாடு தான், தமிழ்நாட்டில் கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி. ஆனால் அதிமுகவில் இருந்து ஒருவர் முதல்வராக வருவார் என்ற அமித்ஷாவின் பேட்டி ஆகும் என்றனர்.